குழந்தைகள் பருவம் புதுமைகள், நிறைந்த பருவம்தான். குழந்தைகள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் புதுமை இருக்கும். புதுமையைத் தேடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘புதுப்பிக்கத் தக்க ஆற்றலில் இருந்து மின்சாரத்தை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்பில் உலக இயற்கை நிதியமும் (W.W.F), சென்னை தேசியக் காற்றாலை ஆற்றல் நிறுவனமும் (N.I.W.E.) போட்டி ஒன்றை சமீபத்தில் நடத்தின. உலகக் காற்றாலை ஆற்றல் நாளையொட்டி இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்புவரையிலான 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களுடைய மாதிரிப் படைப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
இந்தப் போட்டியில், சென்னை கோயம்பேடு டேனியல் தாமஸ் மெட்ரிக். பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஐஸ்வர்யாவும், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கோகுலும் முதல் பரிசைப் பெற்றார்கள்.
வேளச்சேரி பொன் வித்யாஷ்ரம் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அஸ்வதி, ஹர்ஷினி ஆகியோர் இரண்டாம் பரிசைப் பெற்றார்கள். மத்திய புதுப்பிக்கத் தக்க ஆற்றல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் வர்ஷா ஜோஷி பரிசுகளை வழங்கினார்.
உலகக் காற்றாலை ஆற்றல் நாளை அடிப்படையாகக் கொண்டு 2009-ம் ஆண்டிலிருந்து இந்தப் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. மாணவர்கள் மத்தியில் படைப்பாற்றலை வளர்க்கவும், மரபுசாரா ஆற்றலை அவர்கள் மத்தியில் பரப்பவும் உலக இயற்கை நிதியத்தின் தமிழ்நாடு மாநில அலுவலகமும் வேளச்சேரி தேசியக் காற்றாலை ஆற்றல் நிறுவனமும் ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டியை நடத்தி வருகின்றன.