நீங்கள் வசிக்கும் தெருவோ அல்லது சாலையோ எப்படி இருக்கும்? மண் சாலையாக இருக்கும்; தார்ச் சாலையாக இருக்கும்; சிமெண்ட் சாலையாக இருக்கும் அல்லவா? ஆனால், இத்தாலி நாட்டில் உள்ள ஒரு நகரில் இப்படியெல்லாம் சாலைகளோ, தெருக்களோ கிடையாது. அங்கே தண்ணீரில்தான் தெருக்களும், சாலைகளும் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா?
இதைவிடப் பெரிய ஆச்சரியமும் இருக்கிறது. நாம் வெளியே செல்வதற்காக சைக்கிள், பைக், கார்களை வாங்குவோம் இல்லையா? இந்த நகரில் வசிப்பவர்கள் வெளியே செல்வதற்காகப் படகுகளை வாங்கி வைத்திருக்கிறார்கள். அது எந்த நகரம் தெரியுமா? வெனிஸ் நகரம்!
சரி, வெனிஸ் நகரம் தண்ணீரின் மேலே உருவானதா அல்லது நகரம் உருவான பின் தண்ணீர் சூழ்ந்ததா என்றுதானே யோசிக்கிறீர்கள்? சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மக்கள் வசிக்கப் போனபோதே அந்த இடம் நீர் நிறைந்த சதுப்பு நிலமாகத்தான் இருந்ததாம். அந்தக் காலத்தில் எதிரிகள் படையெடுப்பில் இருந்து தப்பிக்கவும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார்கள்.
முழுவதும் நீர் சூழ்ந்த இந்த இடத்தில் வீடுகளும் பெரிய கட்டிடங்களும் எப்படிக் கட்டப்பட்டன தெரியுமா? தண்ணீருக்கு அடியில் பாறைகளைக் கண்டுபிடித்து அதன்மீது நீளமான தூண்களைப் புகுத்திக் கட்டிடம் கட்டினார்கள். வலுவான கட்டுமானத்துக்காக மிக நீளமான பைன் மரங்களும் லார்ஷ் மரங்களும் சதுப்பு நிலத்தில் புகுத்தப்பட்டன. மரங்கள் அடுக்கப்பட்டுச் சதுப்பு மண் மறைக்கப்பட்டது. அதன் மேலே அமைந்த சமதளத்தின்மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது ஏதோ சில ஆண்டுகளில் நடந்த வித்தை அல்ல; பல நூறாண்டு கால முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
தண்ணீரின் மேலேயே வீடுகளையும் பெரிய கட்டிடங்களையும் கட்டிய பிறகு வெளியே சென்று வர என்ன செய்வது என்று யோசித்தார்கள். இதற்காகத் தண்ணீர் வடிகால் முறையைக் கண்டுபிடித்தார்கள். பெரிய நீர் வாய்க்கால்களை அமைத்தார்கள். அப்போது வெனிஸ் நகரத்தின் நீர் மேற்பார்வையாளராக இருந்த கிறிஸ்டோ போரோ சபாடினோ என்பவர்தான் வாய்க்கால்களைச் சீரமைத்தார்.
இன்று இந்த வெனிஸ் நகரம் 118 தீவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தீவையும் இணைக்கக் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெனிஸ் நகரைச் சுற்றித் தற்போது 150 கால்வாய்கள் உள்ளன. கொண்டோலா என்ற படகுகள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நகரில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உலகில் மிக அழகிய நகரங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாகவும் வெனிஸ் நகரம் விளங்கிவருகிறது.
இன்று இந்த வெனிஸ் நகரம் 118 தீவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தீவையும் இணைக்கக் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெனிஸ் நகரைச் சுற்றித் தற்போது 150 கால்வாய்கள் உள்ளன. கொண்டோலா என்ற படகுகள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நகரில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உலகில் மிக அழகிய நகரங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாகவும் வெனிஸ் நகரம் விளங்கிவருகிறது.
பெரு மழை பெய்து நம் தெருக்களையும், சாலைகளையும் தண்ணீர் சூழ்ந்தால், இனிமேல் வெனிஸ் நகரம் உங்களுக்கு ஞாபகம் வரும் இல்லையா?