மாயா பஜார்

குழந்தைகளுக்காக ஒரு கலைச் சேவை

செய்திப்பிரிவு

குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் என்று சொன்னாலேயே பெற்றோர்கள் பயப்படுவார்கள். காசைக் கண்டபடி பறித்துவிடுவார்கள் என்று நினைப்பார்கள். ஆனால், புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்துக்குப் போனால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள். இங்கு குழந்தைகளுக்கான எல்லாவிதச் சிறப்பு வகுப்புகளையும் இலவசமாக ஆண்டு முழுவதும் கற்கலாம்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது ஜவகர் சிறுவர் இல்லத்தின் தலைமையகம். 1973-ம் ஆண்டு முதல் சிறுவர் சிறுமிகள் கற்க விரும்பும் கலைகளை இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள். பள்ளி செல்லும் 6 முதல் 16 வயது வரையுள்ள சிறுவர் சிறுமிகளுக்குக் கலைகளைக் கற்க அனுமதி உண்டு.

மேலும் காலாப்பட்டு, லாஸ்பேட்டை, வில்லியனூர், திருபுவனை, திருவண்டார் கோயில் நெட்டப்பாக்கம், பாகூர், அரியாங்குப்பத்திலும் ஜவகர் சிறுவர் இல்லக் கிளைகள் உள்ளன.

மேற்கத்திய இசையில் கீபோர்டு, டிரம்ஸ், கிதார், கர்னாடக இசையில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதம், கிராமிய நடனம், ஓவியம், கைவினை, தையல், கணினி, நாட்டியம், விளையாட்டுப் பிரிவில் கேரம், செஸ், கிரிக்கெட், இறகுபந்து, தேக்வாண்டோ பயிற்சி இங்கே இலவசமாகக் கற்றுத் தரப்படுகின்றன. இப்போது கோடைக் கால முகாமும் நடைபெற்றுவருகிறது. பள்ளி நாட்களில் கற்க விரும்புவர்களுக்கு மாலை 4.30 முதல் மாலை 6.30 வரை வகுப்புகள் உண்டும்.

கலைகளைக் கற்கும்போது குழந்தைகளின் மனநலனும், உடல் நலனும் மட்டுமின்றி, கல்வித்திறனும் மேம்படும் என்கிறார் பள்ளி தலைமையாசிரியர் நந்தகுமார். கட்டணமில்லாமல் விருப்பமான கலைகளைக் கற்றுத் தர ஜவஹர் சிறுவர் இல்லம் தயார். சிறுவர் சிறுமிகளே நீங்கள் தயாரா?

படங்கள் எம். சாம்ராஜ்.

SCROLL FOR NEXT