அமெரிக்காவில் சனிக்கிழமை காலைகளில் ஒளிபரப்பாகும் டி.வி. கார்ட்டூன் தொடர்கள் மிகவும் பிரபலம். அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் போகேமான் தொடர்தான் மிக அதிகமான வரவேற்பைப் பெற்றது. ஆனால், தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே, போகேமானை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது அந்தத் தொடர். அதுதான் ஸ்பாஞ்ச் பாப் ஸ்கொயர் பேன்ட்ஸ் கார்ட்டூன் தொடர்.
ஒவ்வொரு மாதமும் 5 கோடி பேர் இதைப் பார்க்கிறார்கள். அதேபோல பெரியவர்களையும் கவர்ந்திருக்கிறது இந்தத் தொடர். இதுவரை இந்தத் தொடர் வெல்லாத விருதுகளே இல்லை. பல நல்ல கருத்துகளைச் சொல்லும் தொடரும்கூட. நல்ல கருத்துகளைத் தெரிவிப்பதால் இந்தக் கார்ட்டூன் தொடரைத் தன் குடும்பத்துடன் தொடர்ந்து பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுனும் பாராட்டிய தொடர் இது.
உருவான கதை:
பிரான்ஸ் கடல் ஆய்வு நிபுணர் ஜாக்கஸ் கோஸ்டேவின் பல படங்களால் உந்தப்பட்டார் ஸ்டீபன் ஹில்லன்பர்க். கடல் உயிரியலைப் பாடமாகப் படித்து அதைக் கற்பித்தும் வந்தார் அவர். பின்னர் ஓவியத்திலும் கார்ட்டூனிலும் ஆர்வம்கொண்டு, ஓவியக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கார்ட்டூனிஸ்ட்டாக மாறினார். கார்ட்டூன் தொடர் தயாரிப்பாளர் ஜோ முர்ரேவின் கார்ட்டூன் தொடருக்குப் படைப்பு இயக்குநராக ஹில்லன்பர்க் வேலைக்குச் சேர்ந்தார். கடல் உயிரியலைச் சார்ந்து ஹில்லன்பர்க் உருவாக்கிய ஸ்பாஞ்ச் பாப் கதாபாத்திரம் பெற்ற வரவேற்பு, அவரை முழுநேரப் படைப்பாளியாகவே மாற்றிவிட்டது.
கதாபாத்திரம்:
தன்னம்பிக்கை, கபடமற்ற மகிழ்ச்சி, செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகுந்த ஆர்வம்கொண்ட மனித குணாதிசயங்களைக் கொண்ட ஒரு மஞ்சள் நிறக் கடல் பஞ்சுதான் ஸ்பாஞ்ச் பாப். ஃபாஸ்ட் புட் உணவகத்தில் சமையல்கலை வல்லுநராகப் பணிபுரியும் பாப், மனம் தளராத, சுறுசுறுப்பான குணத்தைக் கொண்டவர்.
கதை அமைப்பு:
பசிபிக் கடலின் அடியில் இருக்கும் பிகினி பாட்டம் என்ற கற்பனை நகரம்தான் இந்தக் கதை நடக்கும் இடம். இங்கே இருக்கும் அனைத்துக் கடல்வாழ் உயிரினங்களுமே மனிதர்களைப்போலக் குணாதிசயங்களைக் கொண்டவை. இவை கார், படகு என இரண்டையும் கலந்து செய்த ஒரு புது மாதிரியான வாகனத்தில் பயணிக்கும். உணவகங்கள், திரையரங்கம், வங்கி என்று அனைத்தையுமே இங்கே கடல்வாழ் உயிரினங்கள் நடத்தி வருகின்றன.
பாப்பின் கதை:
சமையலறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்ச் பஞ்சை பார்த்திருக்கிறீர்களா? சதுர வடிவில் மெத்து மெத்தென்று இருக்கும் அந்தப் பஞ்சு, உயிர் பெற்று, வெள்ளை சட்டை, சிவப்பு டை, காக்கி கால்சட்டை அணிந்துவந்தால் எப்படி இருக்கும்? அவர்தான் ஒரு அன்னாசிப் பழ வீட்டில் குடியிருக்கும் நமது நாயகன் பாப்.
உணவகத்தில் சமையல்கலை நிபுணராகப் பணிபுரியும் பாப், கராத்தே கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு முறையாகப் படகு ஓட்டத் தெரியாது. ஆகவே, இவர் படகு ஓட்டக் கற்றுக்கொடுக்கும் பயிற்சிப் பள்ளியில் படகு ஓட்டக் கற்றுக்கொள்கிறார். இவருடைய படகு ஓட்டத் தெரியாத இந்தக் குணமே பல நகைச்சுவை காட்சிகளுக்கு வழிவகுக்கிறது.
இதுதவிர மீன் பிடிப்பது, கடலில் வரும் நீர்க்குமிழிகளை உடைப்பது ஆகியவை பாப்பின் பொழுதுபோக்குகள். உண்மையில் பாப் ஒரு பயந்த சுபாவம் கொண்ட நாயகன். ஆனால், இவருடைய விட்டுக்கொடுக்காத குணமே இவரை உலக அளவில் ரசிக்க வைக்கும் கார்ட்டூன் கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறது.
நண்பர்கள்
பேட்ரிக் ஸ்டார் (கடல் நட்சத்திரம்): ஒரு கடல் பாறைக்கு அடியில் வசிக்கும் பேட்ரிக்தான் பாப்பின் நெருங்கிய நண்பன். பாப்பைவிட மந்தப் புத்தி கொண்டவன். பல சாகசங்களை மேற்கொள்ளக் காரணம் இவன்தான். தன் செய்கைகளால் இவருடைய வேலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். பாப்பைத் தூண்டிவிடும் இவருடைய செயல்களும், அதனால் கவரப்பட்டுப் புதிய சாகசத்தில் ஈடுபடும் பாப்பும் ஒரு அட்டகாசமான நகைச்சுவை ஜோடி.
ஸ்குவிட்வர்ட்:
பாப்பினுடைய வீட்டின் அடுத்த வீட்டில் வசிக்கும் இந்தக் கடல்வாழ் உயிரினம், நிகழ்கால மனிதர்களைக் கிண்டல் செய்ய உருவாக்கப்பட்டது. எந்தத் திறமையும் இல்லாமல், ஆனால் அனைத்துத் திறமைகளும் இருப்பதாகக் கற்பனை செய்துக்கொண்டு வாழ்கிறது ஸ்குவிட்வர்ட்.
தன்னை ஒரு மாபெரும் ஓவியராகக் கற்பனை செய்துக்கொண்டு வரைந்த ஓவியங்களைத் தன்னுடைய வீட்டில் அலங்காரமாக அடுக்கி வைக்கும். எந்த வேலையையும் செய்யாமல், பாப்பை கிண்டல் செய்து, அவர் செய்யும் அனைத்து வேலையிலும் தொடர்ந்து குற்றம் கண்டுபிடித்து விமர்சனம் செய்யும்.பாப் பணிபுரியும் உணவகத்தையோ, அங்குச் சாப்பிட வருபவர்களையோ பிடிக்காமல் தொடர்ந்து வெறுக்கும்.
யூஜின்:
கடல் நண்டான யூஜின்தான் பாப் பணிபுரியும் உணவகமான ‘கிரஸ்டி கிராப்’பின் உரிமையாளர். மிகுந்த பணத்தாசை கொண்ட யூஜின், ஒரு கப்பல் நங்கூரத்தில் வசிக்கிறார். இவருக்கும் இதே நகரில் வசிக்கும் சம் பக்கெட் என்ற போட்டி உணவகத்தின் உரிமையாளரான பிளாங்டன் என்பவருக்கும் இடையே நடக்கும் போட்டி மிகப் பிரபலம்.
காமிக்ஸ், பொம்மைகள் என மாற்று ஊடகங்களில் வெற்றி பெற்ற பாப், 2004-ம் ஆண்டு வெள்ளித்திரையிலும் கால்பதித்தது. ‘ஸ்பாஞ்ச் அவுட் ஆஃப் வாட்டர்’ என்ற சமீபத்திய படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. நல்ல குணங்கள், விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஸ்பாஞ்ச் பாப், உலக மக்களைக் கவர்வதில் ஆச்சரியம் ஏதும் இருக்கிறதா என்ன?
உருவாக்கியவர்: ஸ்டீபன் ஹில்லன்பர்க்
முழு பெயர்: ஸ்பாஞ்ச் பாப் ஸ்கொயர் பேன்ட்ஸ்
முதலில் தோன்றிய தேதி:
மே 1, 1999 (Help Wanted முதல் பாகம்)
வசிப்பிடம்: கடலடியில் இருக்கும் ‘பிகினி பாட்டம்’ என்ற கற்பனை நகரம்.