உங்களைப் போன்ற பள்ளிக் குழந்தைகள் ‘இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை’ என்ற செய்தியைக் கேட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள் இல்லையா? இந்த அறிவிப்புக்காகவே பலரும் மழைக் காலத்தில் வானிலை அறிக்கையைத் தவறாமல் கேட்பார்கள்.
சில சமயம், ‘இன்று புயல் கரையைக் கடக்கக்கூடும் என்பதால் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது’ என்ற செய்தியையும் கேட்டிருக்கிறோம் அல்லவா? இந்தத் தகவல் எல்லாம் முன்கூட்டியே இவர்களுக்கு எப்படித் தெரிகிறது? எப்படி வானிலையைக் கணிக்கிறார்கள்? வாருங்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வானிலை ஆய்வு மைய மண்டல அலுவலகத்துக்குச் செல்வோம்.
வானிலை குறித்த வரைபடங்கள் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. தன் முன்னால் இருக்கும் மடிக் கணினியில் செயற்கைக்கோள் படங்களைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின், புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் ரமணன்.
“அந்தக் காலத்துல தகவல் தொடர்பு வசதி குறைவா இருந்ததால வானிலை குறித்த தகவல் பரிமாற்றம் குறுகிய எல்லைக்குள்ள இருந்துச்சு. இப்போ உலகம் முழுவதுமான வானிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்” என்று வானிலைத் துறையின் முன்னேற்றம் குறித்துச் சொன்னார்.
புயல், மழை, வெப்பத்தின் அளவு, காற்றின் ஈரப்பதம் இவை மட்டும்தான் வானிலை ஆய்வு மையத்தின் பணிகளா? இதைத் தாண்டியும் நிறையத் தகவல்களை வானிலை மையம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
விவசாய நண்பன்
வானிலை ஆய்வு மையத்தின் சேவை முக்கியமாக விவசாயத்துக்குப் பயன்படுகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மக்களின் ஆதாரத் தொழில் விவசாயம்தானே. எந்தெந்தப் பருவங்களில் மழை பொழியும், ஈரப்பதம் குறையும் அல்லது கூடும் போன்ற தகவல்கள் தெரிந்தால்தான், விவசாயிகள் அதற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியும். இந்தியாவில் இருக்கும் மண்டல வானிலை மையங்கள் அந்தந்த மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவித்துவிடும்.
பிறகு செய்தித்தாள், தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்குத் தகவல் சென்றடையும். இவை தவிர விவசாயிகள் தொலைபேசி மூலமோ, கடிதம் மூலமோ தொடர்புகொண்டு அவர்களது பகுதிக்கு உரிய சிறப்புத் தகவல்களைப் பெறலாம். பல மாநிலங்களில் வானிலை ஆய்வு மையத் தகவலின் அடிப்படையில்தான் விவசாயமே நடக்கிறது.
மழை குறைந்தால் நீர் ஆதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு ஆகியவற்றிலும் நீரின் அளவு குறையும் இல்லையா? அதையும் வானிலை ஆய்வு மையம் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு, பாசன நீரைத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியும்.
அணை கட்டுவதற்கும்கூட இவர்களுடைய உதவி தேவை தெரியுமா? ஒரு இடம் அணை கட்ட உகந்த இடமா, அது சிறந்த நீர்ப்பிடிப்பு பகுதியா என்பது வானிலை ஆய்வு மூலமே கண்டறியப்படுகிறது.
விமான நிலைய சேவை
விமான ஓடுதளம் அமைப்பதற்கும் வானிலை மையத்தின் தகவல் ரொம்ப ரொம்ப தேவை. காற்றைக் கிழித்துக்கொண்டு மேலேறுவதும், கீழிறங்குவதுமே விமானங்களின் அடிப்படை. அதனால் எந்தப் பக்கம் இருந்து காற்று வீசும், அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் எவ்வளவு என்று இவர்கள் தரும் தகவல்கள் விமான ஓடுதளம் அமைக்க உதவுகின்றன.
விமான நிலையங்களில் எப்போதும் வானிலை குறித்த தகவல்கள் அவசியம் என்பதால் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களில் வானிலை ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அன்றைய நாளின் வானிலை, காற்றின் அளவு, அழுத்தம், வான்வழிப் பாதையின் நிலை போன்றவை பதிவுசெய்யப்பட்டு, அதற்கேற்ப விமானங்களின் சேவை முடிவு செய்யப்படுகிறது.
கடலுக்குள் போகலாமா?
துறைமுகங்கள், மீன்பிடித் தொழிலும்கூட வானிலையை நம்பி இருக்கின்றன. இந்தியாவின் கடலோர வானிலை கண்காணிப்புக்காகக் கடலோர வானிலை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடலில் அசாதாரண சூழ்நிலையோ, புயலோ ஏற்பட்டால் கடலோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை தர, வானிலை ஆய்வு மையம் உதவுகிறது.
கரையில் வசிப்பவர்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றின் மூலம் புயல் குறித்து தெரிந்துகொள்ளலாம். கப்பலில் செல்கிறவர்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்? அவர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் துறைமுகங்களில் எச்சரிக்கை செய்வதுபோல் புயல் சின்னத்தைக் குறிக்கும் வகையில் கொடி ஏற்றப்படுகிறது.
வீடு கட்டலாமா?
காற்று வீசுகிற திசையில் வீட்டின் வாசல் இருந்தால்தானே, வீட்டுக்குள்ளும் சில்லென்று இருக்கும்? கிழக்கில் இருந்து கொண்டல் காற்றும் தெற்கில் இருந்து தென்றல் காற்றும் வீசுகிறது. இதன் அளவை அறிந்து, வீட்டின் கட்டமைப்பை உருவாக்கவும் வானிலை மையத்தின் உதவி அவசியம். பெரிய தொழிற்சாலைகளில் எவ்வளவு உயரத்துக்குப் புகைபோக்கி அமைக்கலாம், எந்தெந்தப் பகுதிகளில் சூரியஒளி சேகரிப்புத் தகடுகளை அமைக்கலாம், எங்கே காற்றாலை அமைத்தால் அதிகளவு மின் உற்பத்தி செய்ய முடியும் போன்றவற்றுக்கும் இவர்கள் தரும் தகவல்களே அடிப்படை.
கணிக்கும் முறை
பொதுவாக அனைத்து வானிலை மையங்களிலும் வானிலை ஆய்வுக்கூடங்கள் இருக்கும். இந்தத் திறந்தவெளிக் கூடங்களில் வெப்பம், காற்றின் ஈரப்பதம், மழையளவு ஆகியவற்றை அறிய தனித்தனி கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
வெப்பநிலைமானியில் நான்கு வகையான வெப்பநிலைமானிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலை, சராசரி ஈரப்பதம் ஆகியவை கணக்கிடப்படும். அளவு காட்ட ஒரு அமைப்பு என்றால், இந்த அளவை வரைபடமாகக் காட்ட தெர்மோகிராஃப், ஹைகிரோகிராஃப் என்ற அமைப்புகள் உதவுகின்றன.
மழை அளவைக் கணக்கிட மழை அளவுமானி உதவுகிறது. இதில் நிரம்புகிற மழைநீரின் அளவை வைத்து அந்தப் பகுதியின் மழை அளவு கணிக்கப்படுகிறது. இதை வரைபடமாக வரையவும் ஒரு கருவி இருக்கிறது. காற்றின் திசை காட்டும் கருவியும், அதனுடன் இணைந்த அழுத்த அளவீட்டுக் கருவியும் காற்றின் திசையையும் அழுத்தத்தையும் அளவிட உதவுகின்றன.
ஓய்வே இல்லை
வானிலை மையங்களுக்கு ஓய்வே இல்லை. மழை பெய்கிறதோ, இல்லையோ தினமும் மழையின் அளவை மதிப்பீடு செய்ய வேண்டும். அதாவது அன்று மழையளவு பூஜ்ஜியம் என்று பதிவு செய்ய வேண்டும். முதல் நாள் காலை 8.30 மணிக்குத் தொடங்கி, மறு நாள் காலை 8.30 மணிவரை அனைத்து அளவுகளின் சராசரியும் கணக்கிடப்படுகின்றன.
இந்தத் தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு டெல்லி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து புனேயில் இருக்கும் வானிலை தகவல் சேகரிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பதிவுசெய்யப்படுகிறது. இப்படிப் பதிவு செய்யப்படுகிற அளவுகளை வைத்தே ஒரு ஆண்டின் சராசரி தட்பவெப்பநிலை கணக்கிடப்படுகிறது.
ஆர்வம் இருந்தால் ஆய்வு செய்யலாம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வானிலை ஆய்வு மையமும் அதன் தகவல்களும் மிக அவசியம். வானிலை என்பது வெப்பநிலை, மழையளவு ஆகியவற்றுடன் மட்டும் தொடர்புகொண்டது அல்ல என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே. வேளாண்மை, நீரியல், துறைமுகம், விமான நிலையம், ரேடார் கட்டுப்பாடு என்று பல துறைகள் இதில் அடக்கம். அறிவியல், கணிதப் பாடங்கள் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா? அப்போ இன்னும் சில ஆண்டுகள் கழித்து கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இந்தத் துறையில் சேர நீங்களும் முயலலாம்; வானிலை ஆய்வாளராகவும் ஆகலாம்.
வானிலை நாள்
தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான வானிலை கணக்கீட்டை செய்து கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து 1950-ம் ஆண்டு ‘உலக வானிலைக் கழகம்’ உருவாக்கப்பட்டது.
மார்ச் 23-ம் தேதி இந்த மையம் தொடங்கப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் அந்தத் தேதியே வானிலை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு மையக் கருத்தைக்கொண்டு வானிலை நாள் அனுசரிக்கப்படும். இந்த வருடத்தின் மையக் கருத்து, ‘காலநிலை தொடர்பான நடவடிக்கைக்கான காலநிலை அறிவு’ (Climate knowledge for Climate action).
படங்கள்: எல். சீனிவாசன்