மாயா பஜார்

மாயாஜாலம் செய்யும் தண்ணீர்

ஆதி

இயற்கையில் உருவான பொருட்களில் தண்ணீர் தனித்தன்மை கொண்டது. இது மட்டுமே திரவம், திடம், வாயு என மூன்று இயற்பியல் வடிவங்களிலும் இருக்கிறது.

தண்ணீர் திட நிலையில் பனிக்கட்டியாக மாறும். இது திரவ வடிவத்தைவிட குறைந்த அடர்த்தி கொண்டது என்பதால், தண்ணீரில் பனிக்கட்டி மிதக்கும். அண்டார்டிகா, ஆர்டிக் பகுதிகளில்கூட பனிப்பாறைகளுக்கு அடியில் தண்ணீர்தான் இருக்கிறது. பனிப்பாறைகள் தடிமனாகவும் பரவலாகவும் இருப்பதால் ஐஸ் கண்டமாகிவிட்டன.

தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் என்று படித்திருக்கிறோம். ஆனால், குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலவும் காற்றின் அழுத்தத்தைப் பொறுத்து தண்ணீரின் கொதிநிலை சிறிதளவு மாறும். கடல்மட்டத்தில்தான் தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் தண்ணீரின் கொதிநிலை 94.9 டிகிரி செல்சியஸ்தான்.

உலகில் உள்ள பெரும்பாலான பொருட்களைக் கரைக்கக்கூடியது தண்ணீர். ஏனென்றால், வேறு எந்த திரவத்தைவிடவும், அதிகமான திடப்பொருள்கள் தண்ணீரில் கரைந்து போகின்றன.

பெருமளவு திடப்பொருட்களைக் கரைக்கக்கூடிய திறன் பெற்றது என்பதால் தண்ணீர் நிலத்துக்குள் பாய்ந்தாலும், நம் உடலில் பாய்ந்தாலும் வேதிப்பொருட்கள், கனிமச்சத்துகள், ஊட்டச்சத்துகளைப் பாயும்போது சுமந்தே செல்கிறது.

தந்துகிக் கவர்ச்சி என்ற செயல்பாடு மூலம் நுண்ணிய குழல்களில் தண்ணீர் நகர முடிகிறது. தந்துகி கவர்ச்சி மூலம்தான் தாவர வேர்களில் நீரும், மனித நரம்புகளில் ரத்தமும் பாய்ந்து செல்ல முடிகிறது. ஊட்டச்சத்துகள் கடத்தப்படுகின்றன. இதற்குக் காரணம் தண்ணீரின் பரப்பு இழுவிசை அதிகமாக இருப்பதுதான்.

தூய்மையான அல்லது பரிசுத்தமான தண்ணீர், அதாவது எந்தப் பொருளுமே கலக்காத தண்ணீர் இயற்கையில் எங்குமே கிடைப்பதில்லை. மழைத் தண்ணீர் உட்பட.

தூய்மையான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. ஆனால், காணும் இடமெல்லாம் ஏதோ ஒரு வேதிப்பொருள் சிறிதளவாவது நீரில் கரைந்திருப்பதால்தான், மின்சாரத்தைத் தண்ணீர் கடத்துகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாடம் 2 முதல் 4 லிட்டர் தூய்மையான தண்ணீர் குடிப்பதற்குத் தேவை.

உலகளவில் சராசரியாக 70 சதவிகிதத் தண்ணீர் விவசாயத்துக்கும், 22 சதவிகிதத் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கும், 8 சதவிகிதத் தண்ணீர் மனிதப் பயன்பாட்டுக்கும் செலவாகிறது.

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சராசரியாக 5,000 லிட்டர் தண்ணீர் தேவை.

உலகில் சராசரியாக எட்டில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.

போரில் இறந்து போகும் மொத்த மக்களைவிட தண்ணீர், சுகாதார பிரச்சினையால் உருவாகும் நோய்களால் ஆண்டுதோறும் இறந்து போகும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.

வளரும் நாடுகளில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டு முழுவதற்கும் தூய்மையான தண்ணீரைத் தருவதற்கு 50 ரூபாய் செலவு செய்தால் போதும். ஆனால், அப்படிச் செய்யப்படுவதில்லை.

தண்ணீரின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க, அதில் ஊடுருவும் ஒலி, மிக அதிக தூரம் கடத்தப்படும். இந்தப் பண்பு மூலம்தான் ஓங்கில் (டால்பின்), திமிங்கிலம் போன்ற கடல் உயிரினங்கள், அகஒலிகளை எழுப்பி சக உயிரினங்களுடன் தொடர்புகொள்கின்றன.

SCROLL FOR NEXT