கங்காருகள் துள்ளி ஓடி
கண்ணைக் கவரும் நாட்டிலே,
சிங்காரமாய் கிரிக்கெட் ஆட்டம்,
சிறப்பு மிக்க திருவிழா!
இங்கிலாந்து, இலங்கை, ஆஸி,
இந்தியாவும் மோதுது,
பங்கு கேட்டு இன்னும் நாடு
பலவும் அங்கு சீறுது!
பந்துவீச்சில் சிறந்த வீரர்
பாய்ந்து, சுழன்று வீசுவார்,
வந்தபந்தை அடித்து ஆட
வல்ல வீரர் தாக்குவார்,
மந்தமின்றி ஓடும் பந்தை
மடக்கிச் சிலரும் நிறுத்துவார்,
அந்தவேகம் பார்த்து ரசிகர்
அசந்து கையைத் தட்டுவார்!
நான்கு, ஆறு ரன்கள்
நதியைப் போலப் பாயவும்,
தேன்குடித்த நரியைப் போலத்
தெம்பு கொள்வர் ரசிகரும்,
தான்விரும்பும் அணி ஜெயித்தால்
தாளம் போட்டு ஆடுவார்,
ஊன்உறக்கம் மறந்து போட்டி
ஒன்றை எண்ணி வாழுவார்!
கத்தியில்லை, ரத்த மில்லை,
கருத்தைக் கவரும் போரிது,
வீரர்கள் சேர்ந்து ஆடும்
உலகக் கோப்பை தானிது,
சத்தமாகக் கூவிக் கத்திச்
சண்டை போட்ட போதிலும்,
புத்திகொண்டு மோதும் ஆட்டம்,
புல் தரைக்குள் காணுவோம்!