மாயா பஜார்

விலங்குகளின் விநோதப் பழக்கங்கள்: அலங்கரிக்கும் பறவை!

எஸ். சுஜாதா

அலங்கரிக்கும் பறவை!

தோட்டப் பறவை எனப்படும் பவர்பேர்ட் தன்னுடைய கூட்டை மிக அழகாக அலங்காரம் செய்யக்கூடியது. ஆண்தான் கூட்டைக் கட்டும். கண்கவர் பூக்கள், இறகுகள், அழகான கற்கள், உடைந்த பீங்கான்கள், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யும்.

அலங்காரப் பொருள் அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருப்பது போலப் பார்த்துப் பார்த்து அழகாக அலங்கரிக்கும். இதற்காக நீண்ட தூரம் பறந்து செல்கிறது. பல மணி நேரம் செலவிட்டுக் கூட்டை அலங்கரித்தவுடன், பெண் பறவையைக் கூட்டுக்கு அழைத்து வரும். அலங்காரத்தால் சந்தோஷமடையும் பெண் பறவை, ஆண் பறவையுடன் சேர்ந்து குடும்பம் நடத்தும்.

அடை காக்காத பறவை

குயில் சொந்தமாகக் கூடு கட்டுவதில்லை; அதனால் முட்டை இட்டு அடை காப்பதும் இல்லை. குயில்களுக்குக் கூடு கட்டத் தெரியாது. பெண் குயில், காக்கை கூட்டில் முட்டையை வைத்துவிடும். தன்னுடைய முட்டைகளையும் குயிலின் முட்டையையும் சேர்த்துக் காகம் அடைகாக்கும்.

குயில் குஞ்சு காகத்தின் குஞ்சு போலவே இருப்பதால், காகம் உணவூட்டும். சற்று வளர்ந்த பிறகு, குயில் குஞ்சு பறந்துவிடும். காகத்தின் கூடு கிடைக்காவிட்டால், ஏதாவது ஒரு பறவையின் கூட்டில் குயில் முட்டையிட்டுவிடும்.

ரத்தம் பீய்ச்சும் பல்லி

கொம்புப் பல்லி (horned lizards) எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தன் கண்களில் இருந்து ரத்தத்தைப் பீய்ச்சியடிக்கம் பழக்கம் உள்ளது. எதிரி குழப்பம் அடையும்போது, வேகமாகத் தப்பிச் சென்றுவிடும். ரத்தத்தில் வேதிப் பொருள் இருப்பதால் நாய், ஓநாய் போன்ற விலங்குகள் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.

யானைகளின் துக்கம்

மனிதர்களைப் போலவே யானை இறந்தால் சக யானைகள் கவலைப்படும். இறந்த உடலை மறைத்து வைக்கும். காட்டில் ஏதாவது எலும்புகளைக் கண்டால் தும்பிக்கையாலும் கால்களாலும் எலும்புகளை ஆராய்ச்சி பண்ணும். அது பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த யானையின் எலும்பாக இருந்தாலும் அதை ஆராய்ந்து தெரிந்துகொள்ளும்.

இறந்த யானையைக் கண்டால், உடனே மரக்கிளைகள், இலைகளைப் போட்டு மூடவும் செய்யும். குறைந்தது இரண்டு நாட்களுக்காவது இறந்த யானைக்கு அருகிலேயே நின்றுகொண்டிருக்கும். உணவு, தண்ணீருக்காகக் கிளம்பிச் சென்றாலும் மீண்டும் திரும்பி வந்துவிடும்.

சாணி வண்டு

சாணி வண்டுகள் (dung beetle) விலங்குகளின் சாணத்தை உண்டு வாழும். இனப்பெருக்கக் காலத்தில் பெண் வண்டு, முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி, பின்னங்கால்களால் சாணி உருண்டையை உருட்டிச் செல்லும். வண்டின் எடையை விட சாணியின் எடை அதிகமாக இருக்கும்.

ஈரமான இடத்தில் ஒரு குழி தோண்டி, சாணி உருண்டையைத் தள்ளிவிடும். பிறகு சாணிக்குள்ளே முட்டைகளை இட்டு, மண்ணால் மூடிவிட்டுக் கிளம்பிவிடும். முட்டையில் இருந்து வரும் குஞ்சுகள் சாணியை உண்டு வளர்கின்றன. சாணி தீர்ந்த பிறகு வெளியே வந்து வசிக்கின்றன.​

SCROLL FOR NEXT