மாயா பஜார்

ஜாலியா வாசிக்கலாம் | 2014-ன் குழந்தைப் புத்தகங்கள்

ஆதி

ஃபெலூடா கதை வரிசை

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் உருவாக்கிய பிரபல துப்பறியும் கதாபாத்திரம் ஃபெலூடா. இவரை இந்திய ஷெர்லாக் ஹோம்ஸ் என்று சொல்லலாம். அவருக்கு உதவும் தாப்ஷீ என்ற துப்பறியும் சிறுவன் கதாபாத்திரமும் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. ஃபெலூடாவின் 35 கதைகளும் தனித்தனி நூலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஃபெலூடா கதை வரிசை, சத்யஜித் ராய்,

தமிழில்: வீ.பா.கணேசன், புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,

தொடர்புக்கு: 044-24332924

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதன் மூலம் அறிவியலைத் தெரிந்துகொள்ள முடியும். இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் அந்த வகையிலும், எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் மேதைகள், தங்கள் துறைகளில் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா,

என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906

கால்நடை மருத்துவர்

காட்டுக்குப் போகும் ஒரு கால்நடை மருத்துவர், காட்டு விலங்குகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். ஆனால், எப்படி இருந்தாலும் அவரும் ஒரு மனிதர்தானே. அந்தக் காட்டைச் சேர்ந்த விலங்குகளுக்கு, விலங்குகளிலேயே ஒரு மருத்துவர் கிடைப்பதுதான் கதை. படிக்கப் படிக்க, நகைச்சுவையாக இருக்கும் இந்தப் புத்தகம், ஒரு கார்ட்டூன் நாவல்.

கால்நடை மருத்துவர், பிரபாகரன் பழச்சி,

தமிழில்: யூமா வாசுகி, என்.சி.பி.எச். வெளியீடு,

தொடர்புக்கு: 044-26359906

ஆசிரிய முகமூடி அகற்றி

நம்மளோட ஆசிரியர், பாடத்தை மட்டும் நடத்திவிட்டு விறைப்பாக நடந்து செல்பவராக இல்லாமல், நம்முடன் பேசி கலந்துரையாடலாகவே பாடத்தை நடத்தினால் எப்படி இருக்கும்? அப்படி தனது மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்த அமெரிக்க ஆங்கில ஆசிரியர் மக்கோர்ட்டைப் பற்றிய புத்தகம் இது. அவருடைய வகுப்பறைகள் கதை கேட்பது போல குதூகலமான அனுபவமாக இருக்குமாம்.

நம்மளோட ஆசிரியர், பாடத்தை மட்டும் நடத்திவிட்டு விறைப்பாக நடந்து செல்பவராக இல்லாமல், நம்முடன் பேசி கலந்துரையாடலாகவே பாடத்தை நடத்தினால் எப்படி இருக்கும்? அப்படி தனது மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்த அமெரிக்க ஆங்கில ஆசிரியர் மக்கோர்ட்டைப் பற்றிய புத்தகம் இது. அவருடைய வகுப்பறைகள் கதை கேட்பது போல குதூகலமான அனுபவமாக இருக்குமாம்.

ஆசிரிய முகமூடி அகற்றி, ச. மாடசாமி,

அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 044-28113630

புத்தகப் பரிசுப் பெட்டி

அம்மாவும் அப்பாவும் நமக்குக் கதை படிச்சுச் சொல்லாவிட்டாலும், குட்டிப் பாப்பாவே எழுத்துக் கூட்டி படிக்கிற மாதிரி கதைகள் இருந்தா, எவ்வளவு ஜாலியா இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள காக்கா, அணில், பூனை, நாய், குரங்கு, யானை போன்றவற்றைப் பற்றியும், காலம் காலமாக நம்மிடையே புழங்கி வரும் நகைச்சுவை, நீதிக் கதைகளும் 15 குட்டிக் குட்டிப் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

புத்தகப் பரிசுப் பெட்டி, தமிழில்: உதயசங்கர்,

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924

மரங்களோடு வளர்ந்தவள்

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ரஸ்கின் பாண்ட். இயற்கை, விலங்குகள், தாவரங்கள் பற்றிய இவருடைய வர்ணனை பிரமிக்க வைப்பதுடன், அவை இருக்கும் இடத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். ஒரு சிறு பெண்ணுக்கும் தாவரங்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிய அவர் எழுதியுள்ள புதிய நாவல் இது.

மரங்களோடு வளர்ந்தவள், ரஸ்கின் பாண்ட்,

தமிழில்: ஆனந்தம் சீனிவாசன், நேஷனல் புக் டிரஸ்ட்,

தொடர்புக்கு: 044-28252663

மகிழ்ச்சியான இளவரசன்

பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டு எழுதிய அற்புதமான மாயாஜாலக் கதைகள் நூறாண்டுகளைத் தாண்டி புகழ்பெற்றவை. பேசும் குருவி, மாய உருவம் எடுக்கும் மனிதர்கள் என விநோத உலகுக்கு நம்மை அழைத்துச் சென்று குதூகலப்படுத்துகின்றன இப்புத்தகத்தில் உள்ள இக்கதைகள்.

மகிழ்ச்சியான இளவரசன், ஆஸ்கர் வைல்டு,

தமிழில்: யூமா வாசுகி, என்.சி.பி.எச். வெளியீடு,

தொடர்புக்கு: 044-26359906

அப்பா சிறுவனாக இருந்தபோது

சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையும் எத்தனை எத்தனை சுட்டித்தனங்கள், லீலைகளைச் செய்யும். அப்படி ஒரு குழந்தை செய்தவற்றை விவரிக்கும் புத்தகம்தான் இது. ஒவ்வொரு சுட்டித்தனமும் படிக்கப் படிக்க ஜாலியா இருக்கு.

அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின்,

மறுவடிவம் தந்தவர்: ஈஸ்வர சந்தானமூர்த்தி,

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924

இழந்ததும் பெற்றதும்

போர், மோதல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். ஆனால் அதெல்லாமே பொய், நிஜத்தில் மனிதர்களிடையே எந்தப் பாகுபாடும் இல்லை என்று சொல்கிறது இந்தக் கதை. ஆசியக் குழந்தைகளுக்காக சமாதானம் பற்றிய நூல் வரிசையின் ஒரு பகுதி இது.

இழந்ததும் பெற்றதும், தமிழில்: ஆர்.ஷாஜஹான்,

நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044 - 28252663

டார்வின் ஸ்கூல்

விலங்குகளுடன் பேசும் திறன் கொண்ட ஒரு சிறுவன், விலங்குகள் நடத்தும் பள்ளியில் வேலைக்குச் சேரப் போகிறான். அதற்கு அவன் மேற்கொள்ளும் பயணத்துக்கு நாய், ஆந்தை, பூனை, கிளி, பொன் வண்டு, வாத்து, முயல் என்று உயிரின நண்பர்கள் உதவுகின்றன. கதை வழியாகவே டார்வினின் பரிணாமவியல் கொள்கை இதில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற இரா. நடராசன் எழுதியது.

டார்வின் ஸ்கூல், இரா. நடராசன்,

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,

தொடர்புக்கு: 044-24332924

SCROLL FOR NEXT