மாயா பஜார்

பெரியவர்களையும் வசீகரித்த ஹீமேன்

கிங் விஸ்வா

எண்பதுகளில் ஞாயிற்றுக் கிழமை காலையாகி விட்டால்போதும், மின்னல் ஓசையுடன் 'ஹீமேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவர்ஸ்' என்ற குரல் கம்பீரமாக ஒலிக்கத் தொடங்கிவிடும். ஹீ-மேன் ஏதேதோ பேசிக்கொண்டே வாளைத் தூக்கிக் காட்டுவார். அதே போல ஹீ-மேனின் தொடை நடுங்கிப் புலி, காமெடி மேஜிசியன் ஆர்கோவ் மிகவும் பிரசித்தம்.

தொலைக்காட்சி முன்பு மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து தூர்தர்ஷனில் வந்த ஹீமேன் கார்ட்டூன் தொடரைப் பார்த்த காலம் அது. இருபது ஆண்டுகளைத் தாண்டி இன்றைக்கும் ரசிக்கப்படுகிறது ஹீமேன் கார்ட்டூன் தொடர்.

உருவான கதை: 1976-ம் ஆண்டு ஸ்டார் வார்ஸ் என்ற படம் வெளியானது. அப்போது, அதன் சந்தைப்படுத்தும் உரிமையைப் பெற அமெரிக்காவின் மிகப்பெரிய பொம்மை கம்பெனியான மேட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் ரே வாக்னர் முயன்றார். ஆனால், அவரால் பெற முடியவில்லை. அந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் அப்படத்தின் பொம்மை, டி ஷர்ட் போன்றவை வசூல்மழை பொழிந்தது. பிறகு அதைப் போலவே வெற்றிகரமான பொம்மையைத் தயாரிக்கும் முயற்சியில் சுயமாக ஈடுபட்டார் வாக்னர்.

அதன் விளைவாக ரோஜர் ஸ்வீட் கைவண்ணத்தில் உருவானதுதான் ஹீமேன் பொம்மை. இந்தப் பொம்மை தயாரான உடனேயே விற்பனையில் சாதனை படைத்தது. உடனே எழுத்தாளர் டொனால்ட் கிளட்டும், ஓவியர்கள் ஆல்ஃபிரெடோ அல்காலா, எர்ல் நோரம் ஆகியோரைக்கொண்டு இதன் மூலக்கதையை காமிக்ஸ் வடிவில் உருவாக்கினார்கள். அந்தத் தொடரும் வெற்றி பெற்றது.

இதற்கிடையில் அர்னால்ட் நடித்த கோனன் படமும் ஹீமேன் கதையும் ஒன்று போலவே இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. ஹீமேன் கதாபாத்திர காமிக்ஸ் கதையைத் தயாரித்த குழு, அதற்கு முன்பு கோனன் காமிக்ஸ் தொடரில் பணிபுரிந்தவர்கள் என்பதுதான் இதற்குக் காரணம். வழக்கில் வெற்றி பெற்ற மேட்டல் நிறுவனம் அதற்குப் பிறகு தொலைக்காட்சி அனிமேஷன் தொடர், திரைப்படம் என்று ஹீமேனை உலக அளவில் பிரபலப்படுத்தியது.

ஹீமேனின் கதை: எடர்னியா என்ற கிரகம் உள்ளது. இது அறிஞர்கள் அனைவரும் ஒன்றுகூடும் சபை. இந்தச் சபையில் ஒரு தேவதை தோன்றி வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். அறிஞர்கள் தங்களது சக்தியையும், மெய்யறிவையும் ஒரு சக்திக் கோளமாக மாற்றுகிறார்கள். அது தீயவர்களின் கையில் சிக்காமல் இருக்க அதைச் சுற்றி, மண்டை ஓடுபோலத் தோற்றமளிக்கும் கிரேஸ்கல் என்ற கோட்டையாக மாற்றுகிறார்கள். உலகின் அதிகபட்ச சக்தியை அளிக்கவல்ல இந்தக் கோளம், தேவதையின் வாக்குப்படி இளவரசர் ஆடம் வசம் வந்தடைகிறது.

இந்தக் கோளத்தின் மூலமாக ஆடம் ஒரு வாளைப் பெறுகிறார். சக்தியுள்ள அந்த வாளைக் கையில் எடுத்தாலே போதும். உலகிலேயே மிகவும் வலிமை கொண்ட ஹீமேனாக மாறிவிடுகிறார் ஆடம். அவரது பயந்தாங்கொள்ளி வளர்ப்புப் புலியான க்ரிங்கரும், போர்க்குணம் கொண்டதாக மாறிவிடுகிறது.

நண்பர்கள்

க்ரிங்கர் (புலி): இளவரசர் ஆடமின் வளர்ப்புப் பிராணியான இது, இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டது. ஆடம் ஹீமேனாக மாறும்போது, க்ரிங்கர் பயந்து நடுங்க, அதை அமைதிப்படுத்தத் தன்னுடைய மந்திர வாளை க்ரிங்கரை நோக்கி நீட்ட, அதன் சக்தி க்ரிங்கரைப் போர்க்குணம் கொண்ட புலியாக மாற்றிவிடுகிறது.

டீலா: தேவதையின் மகளான டீலாவுக்கு இளவரசனைப் பாதுகாப்பதுதான் கடமை. இளவரசர் ஆடம்தான் ஹீமேன் என்பதை உணராத டீலா, ஆடம் ஒரு கோழை, சோம்பேறி என்று நினைக்கிறார்.

டங்கன்: டீலாவின் வளர்ப்புத் தந்தையான டங்கன் ஒரு ஆயுத ஸ்பெஷலிஸ்ட். ஹீமேனுக்குத் தேவையான புதிய ஆயுதங்களைத் தயாரிப்பது இவர்தான். ஹீமேனின் ரகசியத்தை அறிந்த மூவரில் இவரும் ஒருவர்.

ஆர்கோவ்: ட்ரோல்லா கிரகத்தைச் சேர்ந்த மந்திரச் சக்திகொண்டது இந்த உயிரினம். இது நகைச்சுவைக்காகச் சேர்க்கப்பட்டது. எப்போதுமே முகத்தைக் காட்டாத ஆர்கோவ், அடிக்கடி தன்னுடைய மந்திரத்தைத் தவறாக உச்சரித்துக் குழப்பத்தை விளைவிக்கும். தொப்பியில் அனைத்துவிதமான பொருட்களையும் மறைத்து வைத்திருக்கும் ஆர்கோவ், அரசவைக் கோமாளியும்கூட.

எதிரிகள்

ஸ்கெலடர்: ஹீமேனின் சித்தப்பாவான இவரிடம் இன்னுமொரு சக்தி இருக்கிறது. இதையும் ஹீமேனின் வாளையும் இணைத்தால், அது ஒரு பயங்கரமான ஆயுதமாக மாறிவிடும். அனைத்துக் கிரகங்களையும் ஆள்வதற்குக் கிரேஸ்கல் கோட்டையைக் கைப்பற்ற நினைக்கும் ஸ்கெலடரின் திட்டங்களை ஹீமேன் தவிடு பொடியாக்குவது, இத்தொடரின் வழக்கம்.

ஹோர்டாக்: ஸ்கெலடரால் வஞ்சிக்கப்பட்டு வேறு கிரகத்தில் சிறை வைக்கப்பட்டவர் ஹோர் டாக். பழிவாங்குவதற்கு எடர்னியா வந்தபோது கிரேஸ்கல் கோட்டையைக் கைப்பற்ற நினைக்கிறார். நெஞ்சில் சிவப்பு வௌவால் சின்னம் கொண்டிருக்கும் இவர் ஹீமேனுக்கும் ஸ்கெலடருக்கும் பொது எதிரி. இவரது சிறுத்தைக்கும் ஹீமேனின் புலிக்கும் இடையே நடக்கும் சண்டைகளும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இந்தியாவில் ஹீமேன்: டைமண்ட் காமிக்ஸ் மூலமாக ஆங்கிலம், இந்தி, வங்க மொழிகளில் ஹீமேன் காமிக்ஸ் வெளிவந்தது. கார்ட்டூன் சேனல்களில் இப்போதும் ஹீமேன் தொடர் வந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைக்கும் அது பிரபலமாகவே உள்ளது.

உருவாக்கியவர்:

வடிவமைப்பாளர் ரோஜர் ஸ்வீட்

காமிக்ஸ் படைப்பாளிகள்:

டொனால்ட் கிளட் (கதாசிரியர்), ஆல்ஃபிரெடோ அல்காலா & ஏர்ல் நோரம் (ஓவியர்கள்).

முதலில் தோன்றிய தேதி:

ஜனவரி 1, 1981 (ஹீமேன் மினி காமிக்ஸ்)

பெயர்: ஹீமேன்

வேறு பெயர்கள்:

இளவரசர் ஆடம்

வசிப்பது: எடர்னியா என்ற கற்பனை உலகத்தில்.

விசேஷச் சக்தி:

உலகிலேயே மிகவும் வலிமை வாய்ந்தவர். மலைகளைக்கூடச் சுலபமாகத் தூக்கிவிடுவார். இவரது வாள் உலகின் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம்

SCROLL FOR NEXT