சுதாவும் ராதாவும் ரொம்ப நல்ல தோழிகள். இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். இருவரும் ஒரே தெருவில்தான் இருந்தார்கள். அதனால் எப்போதும் இரண்டு பேரும் ஒன்றாகவே இருப்பார்கள். ராதாவுக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்தப் பொருளையும் யாரிடமும் தரமாட்டாள்.
மற்றவர்களிடம் இருந்து எதையும் கேட்கவும்மாட்டாள். ஒரு நாள் பள்ளியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சுதாவின் பேனா எழுதாமல் இடைஞ்சல் செய்தது. இன்னொரு பேனாவை அவள் எடுத்தபோது கைதவறி விழுந்து முனை உடைந்துவிட்டது. பேனா இல்லாமல் சுதா தவித்தாள். ராதாவிடம் இரண்டு பேனாக்கள் இருந்தன. ஆனால், அவளுடைய தோழிக்கே இன்னொரு பேனாவை அவள் தரவில்லை.
சிறிது நேரத்தில் ராதா மனம் மாறி பேனாவைச் சுதாவுக்குக் கொடுத்தாள். ராதா எப்படி மனம் மாறினாள்? அதற்கு ‘பாட்டி சொல் கேளு பாப்பா’ புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். ஒவ்வொரு ஆத்திச்சூடியையும் கதை வடிவில் விளக்குகிறது இந்த நூல். அந்தக் கதையின் முடிவில் ஆத்திச்சூடி விளக்கும் நீதி என்ன என்பதை எளிதில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆத்திச்சூடி கதைகளில் வரும் சம்பவங்களும் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி நடப்பவையாகவே இருக்கின்றன. அதனால், ஒவ்வொரு ஆத்திச்சூடியின் நீதியையும் அன்றாட வாழ்வில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அத்துடன், ஒவ்வொரு ஆத்திச்சூடி கதைக்கும் ஒரு திருக்குறளும் கூறி முடித்திருப்பது கதைகளுக்கு வலுச்சேர்த்திருக்கிறது.
நூல்: பாட்டி சொல் கேளு பாப்பா!
ஆசிரியர்: கமலா சுவாமிநாதன்
விலை: ரூ. 50,
வெளியீடு: வானதி பதிப்பகம்,
முகவரி: 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - 17.
தொடர்புக்கு: 044-24342810