பவித்ரா குட்டிய எடுத்துக்கிட்டா அவள் நல்ல சுட்டியான பெண். அவ தாத்தா, பாட்டியோட செல்லம். அவளுக்கும் தாத்தா பாட்டின்னா ரொம்ப பிடிக்கும். பவித்ரா ஒரு நாள் ஸ்கூல் டூர் போறா. பாம்பு மாதிரி வளைஞ்சு வளைஞ்சு போற கொடைக்கானல் மலையில பஸ்ஸுல போறாங்க. அங்க விக்கிற விதவிதமான பழங்கள அவளோட தாத்தா பாட்டிக்காக வாங்கி வச்சுக்கிறாள். அதோட தாத்தா, பாட்டி கிட்ட சொல்றதுக்காக நிறைய டூர் கதைகளயும் சேர்த்து வச்சிக்கிறா.
கொடைக்கானல்ல பார்த்த குரங்கு, கன்னியாகுமரில பார்த்த கடலு பத்தி தாத்தா, பாட்டி கிட்ட சொல்லணும்னு ஆவலா வீட்டுக்கு வர்றா பவித்ரா. பஸ்ல இருந்து எறங்குன உடனே ஓடி மாடிக்குப் போய் தாத்தா, பாட்டிய பார்க்கப் போறா. ஆனா, அவுங்க அம்மா அவள தடுத்து எங்கிட்ட முதல்ல சொல்லுன்னு பிடிச்சிகிறாங்க.
பவித்ரா குட்டி “தாத்தா, பாட்டிகிட்டதான் சொல்வேன்”ன்னு அடம்பிடிக்கிறா. கடைசியில பார்த்த தாத்தா, பாட்டி ரெண்டு பேரும் அங்க இல்ல. பவித்ராவின் அப்பா அவுங்கள முதியோர் இல்லத்துல சேர்த்த விஷயம் அவளுக்கு தெரிய வருது. தாத்தா, பாட்டி இல்லாம பவித்ரா எப்பவும் அழுதுகிட்டே இருந்தா. தாத்தா, பாட்டிய திரும்பியும் பவித்ரா எப்படி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்கிறதுதான் மீதிக் கதை.
இப்படி குட்டீஸ்ங்கள பத்தின கதைகள் இந்தப் ‘புத்தகப் பூமாலை’யில் இருக்கு. பவித்ரா மாதிரி புவனா, மணிகண்டன், மூர்த்தி, சத்யான்னு நிறைய பேர் இந்தக் கதைகள்ல வராங்க. இந்தக் குட்டிப் பசங்க பெரியவுங்களுக்கே பாடம் சொல்றதுபோல முன்னுதாரணமாக நடந்துகிறாங்க.
இந்தக் கதைகள நீங்க படிச்சீங்கன்னா அது உங்க கதை மாதிரியும், உங்க ஃப்ரெண்ட்ஸ் வீட்டுல நடந்த கதை மாதிரியும் இருக்கும். எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் இந்தக் கதைகள எழுதியிருக்காரு. குட்டிப் பசங்களுக்கு நல்ல விஷயத்தை சொல்ற பல விஷயங் களும் இந்தக் கதைப் புத்தகத்துல இருக்கு.
நூல்: புத்தகப் பூமாலை
ஆசிரியர்: எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
விலை: ரூ.65
வெளியீடு: பாற்கடல் பதிப்பகம்
முகவரி: 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன்பேட்டை, சென்னை-600 091.
தொலைபேசி: 044-22474041/9952913872