நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் சூப்பர் ஹீரோவாக முடியுமா? சாதாரண மக்களைப் போல இருக்கும் ஒருவர், எப்படி சூப்பர் ஹீரோவாக முடியும்? முடியும் என்று உலகுக்குக் காட்டியவர்தான் பேட்மேன். உலகின் தலைசிறந்த காமிக்ஸ் ஹீரோக்கள் வரிசையில் இரண்டாவது இடம் இவருக்குத்தான்.
1938-ம் ஆண்டு சூப்பர்மேன் காமிக்ஸ் இமாலய வெற்றிபெற்றது. இந்த வெற்றி பல புதிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்க காமிக்ஸ் நிறுவனங்களைத் தூண்டியது. அப்படி உருவானவர்களில் ஒருவர்தான் பேட்மேன். ஆனால், மற்றச் சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர்மேன், சூப்பர்மேனைப் போல் இல்லாமல் இவர் ஒரு சாதாரண மனிதர் என்பதுதான் இவருடைய தனிச்சிறப்பே.
கண் முன்னே இவருடைய பெற்றோர் டாக்டர் தாமஸ் வேய்ன், மார்த்தா வேய்ன் கொல்லப்படுகிறார்கள். இதைக் கண்டு கொதித்து எழுகிறான் அவர்களது ஒரே மகனான சிறுவன் புரூஸ் வேய்ன். இது போன்ற அநீதி இனிமேல் யாருக்குமே நடக்கக் கூடாது என்று முடிவெடுக்கிறான். இதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு உலகின் சிறந்த தற்காப்புக் கலை வீரனாக மாறுகிறான்.
எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் உள்ளூர மூடநம்பிக்கையால் பயப்படுபவர்கள் இல்லையா? அப்படிப்பட்டவர்கள் பயப்படும்படியான ஒரு மாறுவேடத்தை உருவாக்க அவன் நினைத்தான். அப்போது ஒரு வௌவால் பறந்து சென்றது. உடனே தன்னை ஒரு வௌவால் மனிதனைப் போல (பேட்மேன்) மாற்றிக் கொள்கிறான் புரூஸ்.
அறிவியல், தொழில்நுட்பத்தின் துணையுடன் நூதனக் கருவிகளைக் கண்டறிந்து எதிரிகளை அடக்குகிறான். அன்று முதல் பகலில் காசு, பணத்தில் திளைக்கும் பணக்கார இளைஞனாகவும், இரவில் அநீதியை எதிர்த்துப் போரிடும் நீதியின் காவலனாகவும் மாறிவிடுகிறான்.
பேட்மேன் உடை: துப்பாக்கிக் குண்டு துளைக்காத உடலை இறுக்கிப் பிடிக்கும் கருப்பு நிற உடை, நெஞ்சில் வௌவாலின் முத்திரை, இடுப்பில் பல வகை ஆயுதங்களைக் கொண்ட ஒரு பெல்ட், அடையாளத்தை மறைக்க ஒரு முகமூடி – இதுதான் பார்ப்பவர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும் பேட்மேனின் யூனிஃபார்ம்.
பேட்மேனின் வாகனங்கள்: பேட் மொபைல் என்ற கார் போன்ற வாகனத்தை இவர் பயன்படுத்துகிறார். அதைப் போலவே பேட் பிளேன் என்ற விமானமும் உண்டு.
பேட்மேனின் வசிப்பிடம்: பேட் கேவ் என்ற குகையில் வசிக்கிறார். இந்தக் குகை இவரது பகல் நேர வசிப்பிடமான வேய்ன் மாளிகையின் சுரங்கத் தளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆல்பிஃரெட்: பேட்மேனின் தந்தையிடம் பணிபுரிந்த இவர்தான் பெற்யோர் இறந்த பிறகு புரூஸ் வேய்னை வளர்த்தவர். புரூஸ் வேய்ன்தான் பேட்மேன் என்பதை அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
போலீஸ் கமிஷனர் கோர்டன்: கோத்தம் நகரின் நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் பேட்மேனிடம் உதவி கேட்க ‘பேட் சிக்னல்’ என்ற ஒரு விளக்கை வைத்திருப்பார்.
லூசியஸ் ஃபாக்ஸ்: புரூஸ் வேய்னின் தொழிற்சாலைகளை நிர்வகிப்பவர். பேட்மேனுக்கு பல வகையான ஆயுதங்களையும் கருவிகளையும் செய்துக் கொடுப்பவர்.
ஜோக்கர்: காமிக்ஸ் வில்லன்களிலேயே தலைசிறந்த கதாபாத்திரம் இவர். ஜோக்கர் ஒரு பயங்கரமான எதிரி. வித்தியாசமான ஆயுதங்களை உருவாக்கும் ஜோக்கர், குற்றங்களை செய்துவிட்டு அங்கே ஒரு ஜோக்கர் பொம்மையின் விசிட்டிங் கார்ட்டை விட்டுவிட்டு வருவது வழக்கம்.
பெங்குயின்: பறவைகள் மூலம் பழிவாங்கும் இவரது கையில் இருக்கும் குடை ஒரு பயங்கரமான ஆயுதம்.
மிஸ்டர் பிரீஸ்: விஞ்ஞானி டாக்டர் விக்டர் பிரைஸின் சிறப்பம்சமே எதிரிகளை உறைய வைக்கும் பனித் துப்பாக்கிதான்.
டூ ஃபேஸ் (இரட்டை முகத்தான்): மனநலனை இழந்து வில்லனாக உருவெடுக்கும் இவர், எதைச் செய்தாலும், அதற்கு முன்பு ஒரு நாணயத்தைச் சுண்டிப் பார்த்து, அதற்கேற்பச் செயல்படுபவர்.
தமிழில் பேட்மேன்: 1987-ம் ஆண்டு மே மாதம் திகில் காமிக்ஸ் இதழில்தான் பேட்மேன் முதன்முதலில் தமிழ் பேச ஆரம்பித்தார். தேவியின் கண்மணி காமிக்ஸ் இதழிலும், கோமிக் வேர்ல்ட் இதழிலும் பிறகு வெளியானது. கடைசியாக கோத்தம் காமிக்சின் தமிழ் மொழியாக்க இதழ்களில் பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியானது. இதன் பிறகு, தமிழில் பேட்மேன் தலைகாட்டவில்லை.