“டிவி நிறைய பார்க்காதே", "எப்பப் பார்த்தாலும் டிவியே கண்ணா கிடக்காதே" என்று நம்ம அப்பாவும் அம்மாவும் சொல்றதைத்தான் கேட்டிருப்போம்.
"இந்த டிவி நிகழ்ச்சிய பாரு, நல்லா பாரு"ன்னு பெற்றோரே குழந்தைகளிடம் சொல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது டோரா. அதற்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் சுவாரஸ்யம்.
தமிழ்ல ‘டோராவின் பயணங்கள்' என்ற பேர்ல இது ஒளிபரப்பாகுறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கற்றல் சார்ந்த (learning based programme) இந்த நிகழ்ச்சி, உலகெங்கும் 35 மொழிகளுக்கு மேலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
மனோதத்துவ மேதை ஹோவர்ட் கார்ட்னரின் Theory of Multiple Intelligence-யை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, பள்ளி செல்ல ஆரம்பிக்காத குழந்தை முதல் அதுக்கு மேலே வயசுடைய குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்வதை எளிமையாக்கி, பிரச்சினைகளை எப்படித் தீர்க்கணும்னு சொல்லிக் கொடுக்குது.
டோரா: Ola என்று சொல்லிக்கொண்டே அறிமுகமாகும் டோரா என்ற இந்தச்சிறுமி கம்ப்யூட்டரில் வசிப்பவள். இந்நிகழ்ச்சி வரும் தொடரில் இவள் கம்ப்யூட்டரில் இருப்பதைப்போலக் காட்சியை அமைத்திருக்கிறார்கள்.
டோராவின் நண்பர்கள்
பூட்ஸ் புஜ்ஜி: டோரா இல்லாமல் புஜ்ஜி இல்லை. புஜ்ஜி இல்லாமல் டோராவும் இல்லை. டோராவின் கீ ஃபிரெண்டான இது, பேசும் சக்தி கொண்ட குரங்கு. தன்னுடைய சிவப்பு கலர் காலணிகளை ரொம்ப விரும்புறதால இதுக்குப் பூட்ஸ்னு (தமிழில் புஜ்ஜி) பேர்.
டோராவிடம் இருக்கும் இன்னொரு ஸ்பெஷல் விஷயம் அவளுடைய அப்பா, அம்மா கொடுத்த ஊதா வண்ண முதுகுப் பை. இந்தப் பை டோராவுக்கு தேவையான எல்லாத்தையும் கொடுக்கும். இந்தப் பைக்குள்ளதான் மேப் இருக்கும்.
ஆச்சரியம் என்னன்னா இந்த மேப் பேசும். உலகின் எந்த மூலைக்குப் போறதா இருந்தாலும், மேப்பிடம் வழி இருக்கும். ஒரே ஒரு பிரச்சினை என்னன்னா இந்த மேப் பேசுறதைவிட, நிறையா பாடும்.
நிகழ்ச்சி அமைப்பு
ஒவ்வொரு கதையோட ஆரம்பத்துலயும் டோரா ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்துவாள். அதன் பின்னணில இருக்கும் தகவல்களையும் சொல்லி, அதை எப்படிச் செய்றதுன்னு நமக்கு விளக்குவாள். இத்தொடரின் இமாலய வெற்றிக்குக் காரணம், இத்தொடரைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையையும் நிகழ்ச்சியில் ஈடுபாட்டுடன் பங்கேற்கச் செய்வதே.
ஒவ்வொரு கதையிலும் டோரா பல புதிய வார்த்தைகளையும், அவற்றின் உச்சரிப்பையும், அதன் பயன்பாட்டையும் கதையின் போக்கிலேயே தெரிவிப்பாள். பார்ப்பவர்களையும் ஈடுபாட்டுடன் உச்சரிக்க வைப்பாள். மொழியைக் கற்க, 6 - 7 வயதுதான் சரியான தருணம் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளை நிகழ்ச்சியுடன் ஒன்றிப்போக வைக்க, டோரா பல கேள்விகளைக் கேட்பாள். உதாரணமா ஒரு சந்தர்ப்பத்துல இரண்டு கதவுகள் இருக்கும்போது “எந்தக் கதவைத் திறக்கட்டும்?”னு டோரா நம்மகிட்ட கேட்பாள். பார்வையாளர்கள் “மஞ்சள் நிறக் கதவு” என்று சொல்றதுக்கு, சில நிமிடங்கள் விட்டே காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
எதிரிகள்: ஸ்வைப்பர் என்ற குள்ளநரிதான் டோராவின் பயணங்களில் அதிகம் வரும் எதிரி. இந்தப் பேசும் நரி டோராவுக்கும், நண்பர்களுக்கும் தேவைப்படும் பல பொருட்களைத் திருடி ஒளிச்சு வைக்கும். பார்வையாளர்களுக்குச் சவாலும் விடும். ஒவ்வொரு முறையும் அதை “கண்டுபிடிக்கவே முடியாது” என்று நினைக்கும் ஸ்வைப்பருக்கு, உடனடியாகப் பதிலடி கொடுப்பாள் டோரா.
குகை மனிதன்: டோராவின் பயணங்களில் பலமுறை அவள் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டி இருக்கும். அப்போதெல்லாம் இந்தக் குகை மனிதன் சில புதிர்களை, விடுகதைகளை போடுவான். அதற்குச் சரியான பதிலைச் சொன்னால்தான் பாலத்தைக் கடக்க முடியும்.
ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் டோராவும், புஜ்ஜியும் “நாம் சாதித்து விட்டோம்” என்று பாடியவாறே நிகழ்ச்சியை முடிப்பாங்க. அது குழந்தைகளுக்கும் சாதித்த உணர்வைத் தரும்.
தமிழில் டோரா: 2007-ம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று சுட்டி டிவியில் தமிழ் பேச ஆரம்பித்த டோராவும் புஜ்ஜியும் உடனடியாகப் பார்ப்பவர் மனதைக் கவர்ந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாகத் தமிழ் பேசிவரும் டோரா, தமிழகக் குழந்தைகளிடையே ஒரு டாப் நிகழ்ச்சி.
மாற்று ஊடகங்களில்: டோரா கதை புத்தகங்கள், காமிக்ஸ் புத்தகங்கள், விளையாட்டு செய்முறை புத்தகங்கள், கற்பித்தல் புத்தகங்கள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அத்துடன் டோரா பொம்மைகள், பைகள், அழகுசாதனப் பொருட்கள் என்று டோரா பெயர் தாங்கிய ஆயிரக் கணக்கான பொருட்கள் கிடைக்கின்றன.
உருவாக்கியவர்: கிரிஸ் கிப்பர்ட், வேலரி வால்ஷ், எரிக் வீனர்
முதலில் தோன்றிய தேதி: ஆகஸ்ட் 14, 2000, அமெரிக்காவில் Nick Junior டிவி சேனல்
வடிவம்: முதலில் கார்ட்டூன் தொடர், அப்புறம் புத்தகங்கள்
பெயர்: டோரா (Dora the Explorer), முழு பெயர் டோரா மார்க்குவெஸ்
வேலை: பயணம் செய்வது, உதவுவது.
புதிய டோரா
ஜனவரி 26-ம் தேதி ஆங்கில டோரா டிவி தொடர் முடிவடைகிறது. இது, இத்தொடரின் 178ஆவது பாகம். இத்தொடருக்குப் பிறகு டோரா ஒரு முன்-பதின்ம (Tween) பெண்ணாக நகரத்துக்குச் செல்லப் போகிறாள். இதில் மேப்புக்கு பதிலாக லேட்டஸ்ட் செல்போனை டோரா வைத்திருப்பதாகவும், அதில் இருக்கும் அப்ளிகேஷன்களைக் கொண்டு இடங்களைத் தேடுவதாகவும் அமைத்திருக்கிறார்கள்.