மாயா பஜார்

பறவைகளின் விநோத பழக்கங்கள்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு விஷயத்தை செய்து முடிக்கவும், அதற்கு ஒரு பழக்கத்தை நாம் வைத்திருப்போம் இல்லையா? அதுபோலவே பறவைகளுக்கும் சில விநோதப் பழக்கங்கள் இருக்கின்றன. அந்தப் பறவைகளைப் பார்க்கலாமா?

உணவுத் தேடும் குஞ்சு

ஐரோப்பிய செங்கால் நாரைகள் (European White Stork) தங்களின் குஞ்சுகளுக்கு சாப்பாட்டைத் தேடிக்கொண்டு வந்து கொடுக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அம்மா, அப்பா பறவைகள் கொடுக்கும் உணவு பிடிக்காமல்கூட போகுமாம்.

அந்த நேரங்களில் வேறு நாரைகளிடம் போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிட அதுங்களோட அம்மா, அப்பா பறவைகள் அனுப்பி வைக்கும். அங்கும் இதே சாப்பாடுதான் இருக்கு என்றால், குஞ்சுகள் வேறு நாரையோட வீட்டுக்குச் சாப்பிடப் போகுமாம்.

வாயைப் பிளந்து..

ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றன டானி ஃப்ராக்மவுத் பறவை. பார்ப்பதற்கு ஆந்தையைப் போலவே இருக்கும். இவற்றின் உடல் மரப்பட்டைகளோட நிறத்தில் இருப்பதால் பொந்து, கிளைகளுக்கு நடுவே போய் உட்கார்ந்துகொள்ளும்.

சிறிய பறவைகள், எலி, தவளை பக்கத்தில் வரும்போது வாயை மிக அகலமாகத் திறந்து வைத்துக்கொண்டு அசையாமல் இருக்கும். இரை வாய்க்கு வந்த உடன் வாயை வேகமாக மூடிவிடும். வீனஸ் ட்ராப் என்ற தாவரத்தைப் போலவே இதுவும் இரையைப் பிடிக்கிறது.

குத்திக் கிழிக்கும் பறவை

கடலோரப் பகுதியில் வசிக்கும் பறவை சீகல் (Sea Gull). மீன்கள்தான் இவற்றோட முக்கியச் சாப்பாடு. சில நேரங்களில் 50 அடி நீளம் கொண்ட ராட்சத ரைட் திமிங்கிலங்களைக்கூடச் சாப்பிடத் திட்டம் போடும். திமிங்கிலம் தண்ணீருக்கு மேலே வரும்போது கூர்மையான அலகால் முதுகைக் குத்திக் காயப்படுத்தும். அப்புறமென்ன? கொழுப்புடன் கூடிய சதைப் பகுதிகளைக் கொத்திக்கொண்டு பறக்க ஆரம்பித்துவிடும்.

சிறை வைக்கும் பறவை

அடை காக்கும் காலத்தில் பெண் இருவாச்சி பறவை (Hornbill), பொந்துகளைத் தேடி கண்டுபிடித்துத் தேர்ந்தெடுக்கும். பொந்துக்குள் சென்றதும் ஆண் பறவை மண்ணால் பொந்தை மூடிவிடும். உணவு கொடுக்க மட்டும் சிறிய துளையை விட்டுவிட்டு பொந்தை மூடிவிடும்.

குஞ்சு பொரிந்து, பறக்கும்வரை அம்மா பறவைக்கும் குஞ்சு பறவைக்கும் அந்தக் குட்டித் துளை வழியாகப் புழு, தவளை, பழங்களைக் கொடுத்து அப்பா பறவை பார்த்துக்கொள்ளும். எதிரியிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கவே இப்படி மூடிய பொந்துக்குள் ஆண் பறவை சிறை வைக்கிறது.

துரத்தியடிக்கும் பறவை

வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு பறவை ரீங்காரச் சிட்டு (House Wren). பூச்சிகளைச் சாப்பிட இவற்றுக்கு ரொம்பப் பிடிக்கும். தன்னோட எல்லையைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள ஆண் பறவைகள் தொடர்ந்து சண்டை போடும்.

இந்தப் பறவைகளோட கூடுக்குப் பக்கத்தில் இருக்கும் பிற ஆண் பறவைகளை ரொம்பத் தூரத்துக்குத் துரத்திவிடும். அடை காக்கும் நேரம் வரும்போது மற்ற ஆண் பறவை மட்டுமல்லாமல், எந்தப் பறவையைப் பார்த்தாலும் சேர்த்துத் துரத்தியடித்துவிடும். அவற்றோட கூடுகளையும் சேதப்படுத்திவிடும்.

தொகுப்பு: எஸ். சுஜாதா

SCROLL FOR NEXT