மாயா பஜார்

சுட்டியாக இருந்த போது உயரே பறக்க வைத்த சகோதரர்கள்

டி. கார்த்திக்

அந்தக் குட்டிப் பசங்க ரொம்ப வாலு. வீட்டுல அவுங்க அம்மா, அப்பா படிக்கச் சொன்னா காதுலேயே வாங்கிக்க மாட்டாங்க. விளையாடச் சொன்னா, நாள் பூரா விளையாடிக்கிட்டே இருப்பாங்க. அவுங்க ரெண்டு பேருக்கும் விளையாடுறதுன்னா அவ்வளவு விருப்பம். ஒரு நாள் குட்டிப் பசங்களோட மாமா ஒரு காகித பொம்மை வாங்கிக் கொடுத்தாரு. ரெண்டு பேரும் பொம்மையை வைச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க.

அப்போ அந்தக் காகித பொம்மை திடீர்ன்னு மேலே பறந்துச்சு. பொம்மை அழகா பறக்குதேன்னு ரெண்டு பேரும் வாயைப் பிளந்துகிட்டு பார்த்தாங்க. அப்போதான் அவுங்களுக்கு ஒரு யோசனை வந்துச்சு. இந்தப் பொம்மை இன்னும் உயர பறந்தால் எப்படி இருக்கும்ணு ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க. அந்தக் காகிதப் பொம்மை பறந்த மாதிரியே பறவைகள் பறக்குறத பார்க்கிறதும் அவுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பறவை எப்படி பறக்குதுன்னு, அதைப் பத்தியே ஆர்வமா எல்லாருகிட்டேயும் கேட்டுக்கிட்டு இருப்பாங்க. அதனாலேயே பறவைகள் மேலேயும் அவுங்களுக்கு ஆர்வம் அதிகமா வந்துடுச்சு.

பறவைகள் உயர பறக்குற மாதிரி நம்மாளும் பறக்க முடியுமான்னு ரெண்டு குட்டிப் பசங்களும் ஏங்க ஆரம்பிச்சாங்க. அதைப் பத்தியே எல்லா நேரமும் யோசிச்சுக்கிட்டும் இருந்தாங்க. வருஷங்கள் உருண்டோடிச்சு. பறவை மாதிரி பறக்குறதுக்கான முயற்சியில ரெண்டு பேரும் இறங்கினாங்க. இதுக்காக கடுமையா உழைச்சாங்க. கடைசியில அவுங்க முயற்சியில வெற்றியும் அடைஞ்சாங்க.

ஆமாம், 1903-ம் வருஷம் இதே நாள்ல (டிசம்பர் 17-ம் தேதி) முதல் முறையா குட்டிப் பசங்கள ஒருத்தரான வில்பர் மேலே பறந்தாரு. இன்னொரு குட்டிப் பையனான ஆர்வில், வில்பர் பறக்குறத கண்காணிச்சாரு. அமெரிக்காவுல வடக்குக் கரோலினா மாகாணத்துல கில் டெவிள் என்ற மலை மேலே வில்பர் பறந்தாரு. 120 அடி உயரத்துல 852 அடி தொலைவுக்கு வில்பர் சின்ன வயசில ஆசைபட்டது மாதிரி பறவை போலவே பறந்தாரு. அவுரு மொத்தமா பறந்ததே 12 நொடிகள்தான்.

அவுரு பறந்த அந்த 12 நொடிகள்தான் இந்த உலகத்துக்கு மாபெரும் கண்டுபிடிப்ப தந்துச்சு. இவுங்களுக்கு முன்னால பல பேரும் பறக்க முயற்சி செஞ்சிருந்தாலும், இவுங்க ரெண்டு பேருக்கும்தான் அது முழுசா சாத்தியமாச்சு. அவுங்க ரெண்டு பேரோட கடும் முயற்சியால்தான், இன்னைக்கு ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டத்துக்கு பறக்க காரணமா இருக்கிற விமானம் கிடைச்சுது.

இவுங்க யாருன்னு இப்போ தெரியுதா? ‘ரைட் பிரதர்ஸ்’ன்னு சொன்னா உங்களுக்கு உடனே தெரிஞ்சுடும் இல்லையா? விமானத்தைக் கண்டுபிடிச்ச இந்த ரைட் பிரதர்ஸ் சின்ன வயசில சேட்டைப் பண்ணிக்கிட்டு இருந்தவங்கதான். இன்னும் சொல்லப்போனால், அவுங்க ரெண்டு பேரும் உயர்நிலைப் பள்ளி படிப்பைக்கூட முடிக்கல. ஆனா, அவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த உலகத்துக்கு எப்பேர்பட்ட அரிய கண்டுபிடிப்பை கொடுத்திருக்காங்க, பாத்தீங்களா?

சின்ன வயசில மேலே பறந்த அந்தக் காகிதப் பொம்மையும், பறவைகள் மேலே ரைட் பிரதர்ஸுக்கு இருந்த ஆர்வமும்தான் விமானம் கண்டுபிடிக்க காரணமா இருந்துச்சுன்னு தனியா சொல்ல வேண்டுமா?

SCROLL FOR NEXT