மாயா பஜார்

சூரியனுக்குப் பிறந்தநாள்!

ஆதி

சூரியன் என்னைக்குப் பொறந்துச்சு, தெரியுமா? சூரியன் எல்லாம் இயற்கையோட ஒரு பகுதி, அதுக்கெப்படி பிறந்தநாள் எல்லாம் இருக்க முடியும் என்று ஜி.கே. மாஸ்டர் மாதிரிப் பதில் கேள்வி கேட்கறீங்களா?

ஆனா, சூரியனுக்குப் பிறந்தநாள் கொண்டாடுறாங்களே. பூமிப் பந்தின் பல நாடுகள்ல சூரியனை வரவேற்று ஆண்டுதோறும் கொண்டாட்டங்கள் நடக்குது தெரியுமா?

சூரியன் வாழ்க!

பண்டைக் காலத்தில் நமது மூதாதையர்கள் வேட்டையாடியும், உணவு சேகரித்தும் வாழ்ந்து வந்தார்கள், இல்லையா? திறந்த வெளியில்தான் இவை இரண்டையும் செய்ய முடியும் என்பதால், தட்பவெப்ப நிலையும் பருவகாலங்களும், அவர்களது வாழ்க்கையை நிர்ணயித்தன. அதன் காரணமாகவும், சூரியன் இல்லையென்றால் இந்தப் பூமியில் எந்த உயிரும் வாழ முடியாது என்ற அறிவியல் உண்மையாலும் சூரியனைப் போற்றி வந்தனர். அது வளம் தர ஆரம்பிக்கும் காலத்தைக் கொண்டாடினார்கள்.

கொண்டாட்டம்

பூமிப் பந்தின் வடக்கு பகுதிக்கு அருகேயுள்ள பகுதிகளில் டிசம்பர் மாத நடுப் பகுதி வரை, தினசரி சூரியன் சீக்கிரம் மறைந்துவிடும். வழக்கமாக, டிச. 21-ம் தேதிக்குப் பிறகே சூரியன் அதிக நேரம் தெரியத் தொடங்கும். அதனால், அன்றைக்குச் சூரியன் மறுபிறப்பு எடுப்பதாக அந்தக் காலத்தில் நம்பப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த நாளில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 21-ம் தேதிக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. பூமிப் பந்தின் வடக்கு நாடுகளில் ஆண்டின் குறுகிய பகல் - நீண்ட இரவு அன்றைக்குத்தான் வருகிறது. ஆங்கிலத்தில் இதன் பெயர் Winter Solstice, தமிழில் மகராயனம். வடக்கு நாடுகளில் இது கடும் குளிர்காலத்தின் தொடக்கம். அதனால் குளிர்கால - கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலம் விடப்படுகிறது.

மகராயனம் நீண்ட காலமாக யூல் (Yule - Juul) என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. வெப்பம், வெளிச்சம், உயிரூட்டும் பண்புகளைக் கொண்ட சூரியன் மீண்டும் வருவதைக் கொண்டாடும் வகையில் நெருப்பு கொளுத்தப்பட்டு அந்த நாள் வரவேற்கப்பட்டது.

கிறிஸ்துமஸின்போது அனுசரிக்கப்படும் பல சடங்குகள், யூல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தவைதான் என்கிறார்கள். கிறிஸ்துமஸுக்கு மரங்கள் வைப்பது, பச்சை, சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்துவது, பரிசுகள் அளித்துக் கொள்வது போன்ற எல்லாமே, ஒரு காலத்தில் யூல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தவைதான்.

யூலும் கிறிஸ்துமஸும்

பழைய ரோமப் பேரரசில் டிசம்பர் 25-ம் தேதி சூரியனின் பிறந்த நாளாக அனுசரிக்கப்பட்டு யூல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு முன்னதாகவே பண்டைய ஸ்காண்டிநேவியாவில் (நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து) பாகன் என்ற பண்டைய மதத்தைப் பின்பற்றி வந்தவர்கள், சூரியனை வரவேற்க வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் ரோமைச் சேர்ந்த தேவாலயத் தலைவர்கள் டிசம்பர் 25-ம் தேதியை யேசுநாதரின் பிறந்தநாளாகக் கொண்டாட ஆரம்பித்தனர் என்கிறார்கள். பாகன் மதத்தினர் மகராயனத்தில் பின்பற்றிய பல சடங்குகள் அதற்குப் பின்பே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் இணைக்கப்பட்டன.

யூல் சடங்கு ஒன்றின்படி, இருளை அகற்றுவதன் அடையாளமாகச் சிறு மரத்துண்டு எரிக்கப்பட்டது. அதில் கிடைக்கும் சாம்பலை வைத்துக்கொள்வது தங்கள் வீடுகளைப் பாதுகாக்கும், அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை. அந்தக் காலத்தில் அதிகம் நிலவும் இருட்டை ஓட்டுவதற்காகவே மரத்துண்டை எரிக்கும் வழக்கம் வந்திருக்கலாம்.

இப்படியாகச் சூரியனை வரவேற்கும் இந்தக் கொண்டாட்டங்கள், இரவுகள் நீண்டிருக்கும் காலத்தைப் பிரகாசமாக்கவும், வரப்போக உள்ள வசந்தக் காலத்துக்கு வரவேற்பாகவும் அமைகின்றன.

SCROLL FOR NEXT