வி
ல்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியைப் பார்த்து, இந்தியா முழுவதும் பலரும் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டிவருகிறார்கள். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது மானஸ்வினி.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளித்துவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளாக வில்வித்தை விளையாட்டில் பயிற்சி எடுத்துவருகிறார் மானஸ்வினி. மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களையும் பெற்றுவருகிறார்.
சமீபத்தில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், பிரின்சஸ் கப் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களோடு முதல் சர்வதேசப் போட்டியில் பங்கேற்று, 15-வது இடத்தைப் பிடித்தார் மானஸ்வினி. சர்வதேசப் போட்டியில் இது குறிப்பிடத்தக்க சாதனை.
ஜி.டி. அலோஹா வித்யா மந்திர் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மானஸ்வினி, வில்வித்தையில் சர்வதேச, ஒலிம்பிக் பதக்கங்களை வென்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தருவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஜபல்பூரில் ஒரு போட்டி. இதில் பங்கேற்பதற்காக 36 மணி நேரம் கடினமான பயணத்தை மேற்கொண்டார். தங்கப் பதக்கத்தையும் பெற்றார். மானஸ்வினியின் இந்த அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் பார்க்கும்போது, ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறும் நாள் தொலைவில் இல்லை!