சமீபத்தில் ‘அந்நியன்’ திரைப்படம் பார்த்தேன். Multiple personality disorder என்பது உண்மையா? இப்படி மனிதர்கள் இருக்கிறார்களா? இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோயா டிங்கு?
– ஆர். பார்த்திபன், 12-ம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
பல்வகை ஆளுமை நோய் மிகவும் அரிதான மன நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வோர் ஆளுமைக்கும் தனியான சிந்தனையும் செயல்களும் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் ‘அந்நியன்’ திரைப்படத்தில் பார்த்ததுபோல் இருக்க மாட்டார்கள். திரைப்படம் மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறது பார்த்திபன். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இல்லை என்பது ஓர் ஆறுதல்.
புகழ்பெற்ற ஸ்காட்லாந்து எழுத்தாளர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் இந்தப் பிரச்சினையை வைத்து ஒரு நாவல் எழுதி, 1886-ம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறார்! 131 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது என்பதும் அதை வைத்து ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்பதும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.
Strange Case of Dr Jekyll and Mr Hyde என்ற இந்த நாவலை இன்று படித்தாலும் திகிலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். டாக்டர் ஜெகில் உயிரைக் காப்பாற்றக்கூடிய நல்ல மனம் படைத்த மருத்துவராகவும் தீய சிந்தனை கொண்ட ஹைட் ஆகவும் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அற்புதமாகச் சொல்லியிருப்பார் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். 30 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தாளர் சுஜாதாவும் பல்வகை ஆளுமை நோய் குறித்துக் கதை எழுதியிருக்கிறார்.
பப்பாளி, பலா போன்ற மரங்களில் பால் வடிவது ஏன் டிங்கு?
- கே. ராஜஸ்ரீ, குளித்தலை.
பப்பாளி, பலா, வேம்பு, ஆல், அத்தி போன்ற மரங்களிலும் கள்ளி, எருக்கு போன்ற செடிகளிலும் பால் வடிகிறது. நீராவிப் போக்கைக் குறைப்பதற்காகத் தாவரங்கள் நீரைத் திட, திரவப் பொருளாக மாற்றி வைத்துக்கொள்கின்றன. தாவரங்களுக்கு இயற்கை வழங்கிய தகவமைப்புதான் இந்தப் பால் வடிதல் ராஜஸ்ரீ.
சுந்தரவனக் காடுகளைப்போல் தமிழ்நாட்டில் சதுப்புநிலக் காடுகள் இருக்கின்றனவா டிங்கு?
– எஸ். ஜோஸ்வா பாரதி, ஏரல், தூத்துக்குடி.
மாங்குரோவ் காடுகள், அலையாத்திக் காடுகள், சதுப்புநிலக் காடுகள் என்பதெல்லாம் ஒன்றே. உலகின் மிகப் பெரிய சதுப்புநிலக் காடு சுந்தரவனக் காடு. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள பிச்சாவரமும் கோடியக்கரைக்கு அருகே உள்ள முத்துப்பேட்டையும் முக்கியமான அலையாத்திக் காடுகள். இவை சுற்றுலாத்தலங்களாகவும் இருக்கின்றன. காடுகளுக்குள் படகில் பயணிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
அண்ணனாகப் பிறந்தால் தம்பி, தங்கைக்கு விட்டுக் கொடுக்கத்தான் வேண்டுமா டிங்கு?
– பி. கோகுல், குன்னூர்.
நிறைய விட்டுக் கொடுக்கும் கோகுலுக்குப் பாராட்டுகள்! பெரியவர்கள் சிறியவர்களுக்காக விட்டுத் தருவதில் தவறு ஒன்றும் இல்லை. உங்கள் அம்மாவும் அப்பாவும் எத்தனையோ விஷயங்களில் உங்களுக்காக விட்டுக்கொடுத்திருப்பார்கள் இல்லையா? அதேபோல உங்களை விடச் சிறியவர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் விட்டுத்தருவதுதானே நியாயம்? நிச்சயமாக உங்கள் தம்பி, தங்கையைவிட உங்களுக்குப் புரிதலும் அனுபவமும் அதிகம் இருக்கும். அப்படியென்றால் அவர்களைப் புரிந்துகொண்டு, நீங்கள்தான் விட்டுக்கொடுக்க வேண்டும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்று சொல்வார்கள். அதனால் மகிழ்ச்சியாக விட்டுக்கொடுங்கள் கோகுல்.