மாயா பஜார்

வானில் வட்டமிடும் பட்டங்கள்!

# பட்டங்களைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். கி.மு. 5-ம் நூற்றாண்டில் இரு அறிஞர்கள் பட்டத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் பட்டுத்துணியில் மூங்கில் குச்சிகளை இணைத்துப் பட்டங்கள் செய்யப்பட்டன. கி.பி. 6-ம் நூற்றாண்டில் காகிதப் பட்டங்கள் உருவாகின.

# சீனர்கள் பட்டங்களை வைத்து தூரத்தை அளந்தனர். காற்றின் இயல்பை அறிந்தனர். தகவல்களைத் தெரிவித்தனர். ஆரம்பக் காலச் சீனப் பட்டங்கள் செவ்வக வடிவில் இருந்தன. பட்டத்தில் வளைந்த குச்சியைப் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் வால் இல்லா பட்டங்கள் உருவாயின. நவீன காலத்தில் புராண உருவங்கள், தலைவர்களின் உருவங்களில் எல்லாம் பட்டங்கள் செய்யப்படுகின்றன. சில பட்டங்களில் விசில் சத்தமும் இசையும் வெளிப்படுகின்றன.

# சீனாவிலிருந்து பட்டங்கள் கம்போடியா, தாய்லாந்து, இந்தியா, ஜப்பான், கொரியாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் பட்டம் அறிமுகமான பின்னர், ஜனவரி மாதம் நடைபெறும் அறுவடை திருவிழாவில் பட்டங்கள் விடும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

# பட்டம் விமானம் கண்டுபிடிப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறது. விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்க்ளின் மின்னலையும் இடியையும் ஆராய்வதற்குப் பட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அலெக்சாண்டர் கிரஹாம் பெல், ரைட் சகோதரர்கள் போன்றவர்களும் பட்டங்களை வைத்துப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

# சில நாடுகளில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை நடத்துகிறார்கள். அகமதாபாத்திலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் பட்டங்களுக்கான அருங்காட்சியகம் உள்ளது.

# வேலையை விட பட்டம் விடுதலில் மக்கள் ஆர்வம் செலுத்தியதால் ஜப்பானில் சில காலம் பட்டம் தடை செய்யப்பட்டது. பட்டம் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவிலும் 3 ஆண்டுகள் பட்டம் தடை செய்யப்பட்டிருந்தது. தாய்லாந்தில் பட்டம் விடுவதற்கு 78 விதிமுறைகள் இருக்கின்றன.

# நியூசிலாந்தைச் சேர்ந்த பீட்டர் லின், 10,400 சதுர அடி கொண்ட மிகப் பெரிய பட்டத்தை உருவாக்கி, கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார்.

# உலகின் பெரும்பாலான நாடுகளில் பட்டம் விடுதல் முக்கியமான விளையாட்டாக மாறிவருகிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் 5 கோடி பட்டங்கள் விற்பனையாகின்றன.

SCROLL FOR NEXT