மாயா பஜார்

“நாங்களும் கதை சொல்வோம்!”

மு.முருகேஷ்

பெ

ரியவர்கள் கதை சொல்லும்போது குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டத்தில் சிறுவர்கள் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள், பெரியவர்கள் மகிழ்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மேடை முழுவதும் சிறுவர், சிறுமியர் ஆக்கிரமித்திருந்தனர். தாங்கள் ரசித்துப் படித்த கதைகளைத்தான், பாவத்தோடு அழகாகச் சொன்னார்கள்.

4-ம் வகுப்பு மாணவன் விஷ்ணு, “இப்ப உங்களுக்கு ‘மரணத்தை வென்ற மல்லன்’னு ஒரு கதை சொல்லப் போறேன்...” என்று ஆரம்பித்து இருபது நிமிடங்கள் சிறுதடங்கலின்றிக் கதையைச் சொல்லி முடித்தபோது, கைத்தட்டல் அடங்க வெகு நேரமானது.

‘பேசும் தாத்தா’ கதையை சுவேதாவும் ‘கருணைத் தீவு’ கதையை சைலஜாவும் ரசனையாகச் சொல்லி முடித்தார்கள்.

2chsuj_story_telling2.jpg

‘மாயக் கண்ணாடி’ கதையைச் சொன்ன காவ்யா, நம்மையும் கைப்பிடித்து கதையுடன் அழைத்துச் சென்றார். இரண்டே நிமிடங்களில் மழலை மொழியோடு ‘காணாமல் போன சிப்பாய்’ கதையைச் சொல்லி, ‘சபாஷ்’ பெற்றார் இரண்டாம் வகுப்புப் படிக்கும் கீர்த்தனா.

‘அய்யாச்சாமி தாத்தா’ கதையைச் சொன்ன 9-ம் வகுப்பு மாணவர் ஹனீஃபா, பாதியில் நிறுத்தி, “அடுத்து என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? உங்களுக்கு எப்படித் தெரியும்? நான்தானே கதையப் படிச்சிருக்கேன். நானே சொல்றேன்…” என்று தொடர்ந்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

நிகழ்ச்சியின் இடையிடையே ஜெய் சுதன், அஜா, டிம்பிள், பிரதாப் ஆகியோர் சிறுவர் பாடல்களைத் தாங்களே இசையமைத்துப் பாடினார்கள்.

‘பல்லாங்குழி’ என்ற அமைப்புதான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதன் நிறுவனர் இனியன், “இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் உறவுகளால் கைவிடப்பட்ட குழந்தைகளும் பங்கேற்றதில் மகிழ்ச்சி. அவர்களுக்குப் பிடித்த கதையைத் தேர்வு செய்து, அவர்களது மொழியில் அற்புதமாகச் சொன்னார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT