இந்தியக் குடியரசுத் தலைவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் டிங்கு?
- எஸ். சூர்யா, ஏழாம் வகுப்பு, சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை.
இந்தியாவில் இதுவரை 13 குடியரசுத் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2-வது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 முதல் 1967 வரை பதவியில் இருந்தார். 1987 முதல் 1992 வரை ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்தார். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்தார் சூர்யா.
நீலத் திமிங்கிலத்தின் இதயம் ஒரு பெரிய கார் அளவு இருக்கும் என்று படித்திருக்கிறேன். ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை அது துடிக்கும் டிங்கு?
– எம். கயல்விழி, ஒன்பதாம் வகுப்பு, பெண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளி, மானாமதுரை.
நீலத் திமிங்கிலத்தின் இதயம் பெரியதாக இருந்தாலும் ஒரு நிமிடத்துக்கு 5 அல்லது 6 முறைதான் துடிக்கி்றது. தண்ணீருக்கு அடியில் செல்லும்போது இன்னும் குறைவாகவே துடிக்கிறது. ஹம்மிங்பேர்ட் இதயம்தான் மிக அதிகமாகத் துடிக்கக்கூடியது. ஒரு நிமிடத்துக்கு 1,260 தடவை துடிக்கி்றது. அதாவது உருவம் பெரிதாகப் பெரிதாக இதயத் துடிப்பு குறைகிறது. உருவம் சிறிதாகச் சிறிதாக இதயத் துடிப்பு அதிகரிக்கிறது கயல்விழி. மனிதனின் இதயத் துடிப்பு எவ்வளவு தெரியுமா? ஓய்வாக இருக்கும்போது ஒரு நிமிடத்துக்கு 70 முறை துடிக்கிறது. இயங்கினால் 100 முறைவரை துடிக்கிறது.
ஸ்மார்ட் போன் எடுத்து விளையாடினாலே எங்கள் வீட்டில் திட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். உங்கள் வீட்டில் எப்படி டிங்கு?
– சி. மோகனசுந்தரம், திருக்காட்டுப்பள்ளி.
நீங்கள் மட்டுமல்ல; இன்று நிறையப் பேர் சந்திக்கும் பிரச்சினை இதுதான். நாம் தொழில்நுட்பத்தை வெகு விரைவில் கற்றுக்கொள்கிறோம். ஆனால், அதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா மோகனசுந்தரம்? இணையம் மூலம் உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம், புரியாத பாடங்களைப் படித்துப் பார்க்கலாம். ஆனால், நாம் கேம்ஸ் விளையாடுவதிலும் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்களைப் பார்ப்பதிலும்தானே அதிக நேரம் செலவிடுகிறோம்.
அது மட்டுமின்றி, கையில் போன் வந்துவிட்டால் சுற்றுப்புறத்தை மறந்துவிடுகிறோம். நமக்குப் படிப்பு, விளையாட்டு, நண்பர்களுடன் அரட்டை என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஓய்வு நேரத்தில் எப்போதாவது போன் பயன்படுத்தினால் உங்களைத் திட்ட மாட்டார்கள். ஸ்மார்ட் போன் என்றில்லை, நான் எந்த விஷயத்துக்கும் அடிமையாக மாட்டேன். அவசியத்துக்குப் பயன்படுத்துவேன். நீங்களும் இப்படி முயன்று பாருங்கள் மோகனசுந்தரம்.
டைனோசர்கள் எவ்வளவு காலம் இந்தப் பூமியில் வசித்தன டிங்கு?
– ஜோ. எஸ்தர், ஆறாம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை.
சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் உருவாகின. 16.5 கோடி ஆண்டுகள் பூமியில் வசித்தன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போய்விட்டன எஸ்தர்.