கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த வீடு ஈரோட்டில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சென்னை ராயபுரத்தில் ராமானுஜன் அருங்காட்சியகம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? பலருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சோமு செட்டித் தெருவில் உள்ள இந்த அருங்காட்சியகத்துக்குச் சென்று வந்தால் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொண்டு வரலாம்.
ராமானுஜனின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் இங்கே ஒளிப்படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவருடைய அம்மா கோமளத்தம்மாள், மனைவி ஜானகி, ராமானுஜன் வீட்டின் முன் தோற்றம், அவர் பயன்படுத்திய பலகை , ராமானுஜன் நோயில் வீழ்ந்தபோது பயன்படுத்திய பாத்திரம், அவர் படித்த பள்ளிக்கூடம், பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்வரை அனைத்தும் ஒளிப்படங்களாக அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றன. அதுமட்டுமல்ல, ராமானுஜத்தின் 5 புத்தகங்களும் இங்கே உள்ளன.
தனக்குப் புரியாத கணக்குப் புதிருக்கு ராமானுஜன் அளித்த விடையைக் கண்டு அதிசயித்த லண்டன் கணித மேதை ஹார்டியுடன் அந்த விடையை ஒளிப்படமாக்கியும் வைத்துள்ளார்கள். ராமானுஜத்தின் கணிதச் சூத்திரம், தேற்றம் போன்ற அரிய பொக்கிஷங்களையும் சேகரித்து இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சிறார்கள் கணிதத்தைச் சுலபமாக அறிந்துகொள்ள இங்கே கணித உபகரணங்கள்கூட இருக்கின்றன.
சிறார்களுக்கென அருங்காட்சியகத்தில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகள், விவேகானந்தரின் நூல்கள், தலைவர்கள் குறித்தும் பல புத்தகங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான சிறுகதைப் புத்தகங்களும் அதிகமாக உள்ளன. இந்த நூலகத்தில் உறுப்பினராக 100 ரூபாய் கொடுத்தால் போதும்.
தமிழகத்திலிருந்து பல்வேறு பள்ளிகளி லிருந்தும் இங்கே மாணவர்கள் வந்து சுற்றிப் பார்க்கிறார்கள். சென்னை வரும் வெளி நாட்டவர்கள் விரும்பி பார்க்கும் இடங்களில் இந்த அருங்காட்சியகமும் ஒன்று. மகமாயி அம்மாள் தங்கப்பா நாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையால் 1993-ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.
இது ஒரு சிறிய அருங்காட்சியகம்தான்; ஆனால், அழகான அருங்காட்சியகம்!
- கனிமொழி ஜி