“கைவீசம்மா கைவீசு", "தோசை யம்மா தோசை", "அம்மா இங்கே வா வா", "மாம்பழமாம் மாம்பழம்"...
இந்தத் தமிழ் ரைம்ஸ் பாட்டையெல்லாம் கேட்டிருக்கீங்களா? நம்மளோட தாத்தா-பாட்டில ஆரம்பிச்சு, இன்னைக்கு வரும் குழந்தை பாடல் சி.டி. வரைக்கும் நம்மைக் குதூகலப்படுத்தும் இந்தப் பாட்டையெல்லாம் எழுதினவர் அழ. வள்ளியப்பா.
அவரோட பாட்டெல்லாம் எல்லோருக்கும் சட்டுனு பிடிச்சுப் போறதுக்குக் காரணம், ஜாலியா பாடுறதுக்கு வசதியா எதுகை மோனையோடவும் எளிதான சொற்களும் சேர்த்து எழுதப்பட்டதாலதான். இப்படிக் குழந்தைகளுக்குப் பிடிச்ச பாட்டெல்லாம் நிறைய எழுதுனதால, 'குழந்தைக் கவிஞர்'னு அவரை கூப்பிட்டாங்க. இந்தப் பட்டத்தை அவருக்குக் கொடுத்தவர் எழுத்தாளர் தமிழ்வாணன்.
சின்ன வயதில்
அழ. வள்ளியப்பா, தன்னோட முதல் பாட்டை எழுதனப்ப அவரோட வயசு என்ன தெரியுமா? 13. புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம்கிற கிராமத்துலதான் அவர் பிறந்தார். அங்கேர்ந்து 4 கி.மீ. தொலைவுல இருந்த கடியப்பட்டி உயர்நிலை பள்ளிலதான் அவர் படிச்சார். அந்தக் காலத்துல பஸ்ஸெல்லாம் கிடையாதே. நண்பர்களோட சேர்ந்து ‘நடராஜா சர்வீஸ்'ல எல்லாரும் நடந்துதான் பள்ளிக்கூடத்துக்குப் போனாங்க.
அப்படிப் போகும்போது, அவர் சொன்ன சின்ன பாட்டுதான், அவரோட முதல் பாட்டு.
"காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு
ஒளிய இடம் தேடு
ஏழைகள் படுவதோ அரும்பாடு
டிக்கெட் விலையோ பெரும்பேடு!''
இப்படிச் சின்ன வயசுலயே பாட்டைச் சொன்னப்ப, எளிமையான சொற்களைப் பயன்படுத்துறது முக்கியம்கிறத அவர் புரிஞ்சுக்கிட்டார். பின்னாடி அவர் எழுதுன எல்லாப் பாட்டுமே, இப்படி எளிமையாத்தான் இருந்துச்சு.
முதல் தொகுப்பு
படிச்சு முடிச்ச பின்னாடி, அவரோட ஊரைச் சேர்ந்த சக்தி வை.கோவிந்தன் சென்னைல நடத்துன சக்தி காரியாலயம் பதிப்பகத்தில் வள்ளியப்பா வேலைக்குச் சேர்ந்தார். அப்போ அவரை எழுதத் தூண்டியவர் தி.ஜ.ரங்கநாதன் என்ற எழுத்தாளர் தி.ஜ.ர. அங்க வேலை பார்த்தப்ப வள்ளியப்பாவுக்கு நிறைய எழுத்தாளர் நண்பர்கள் கிடைச்சாங்க.
கொஞ்ச காலத்திலேயே இந்தியன் வங்கில அவருக்கு வேலை கிடைச்சது. ஆனா, தொடர்ந்து குழந்தைகளுக்கு அவர் கவிதை, கதைகளை எழுதிட்டுதான் இருந்தார்.
1944-வது வருஷம் 23 பாடல்களோட அவரோட முதல் குழந்தைப் பாடல் தொகுப்பு ‘மலரும் உள்ளம்' வெளியாச்சு. அதுக்குப் பின்னாடி ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடல்கள அவர் எழுதியிருக்கார். இந்தக் குழந்தை பாடல்களைப் பார்த்துக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையே வள்ளியப்பாவைப் பாராட்டியிருக்கார்.
முழு நேரமும் குழந்தைகள்
வங்கி வேலைலேர்ந்து ஓய்வு பெற்ற பின்னாடி, குழந்தை இலக்கியம் படைக்கிறதையே முழு நேர வேலையாக்கிக்கிட்டார். ‘கோகுலம்' குழந்தைகள் மாத இதழோட கவுரவ ஆசிரியராவும் இருந்தார்.
‘மலரும் உள்ளம்', ‘சிரிக்கும் பூக்கள்' எல்லாம் அவரோட குழந்தைப் பாடல் தொகுதிகள். ‘ஈசாப் கதைப் பாடல்கள்', ‘பாட்டிலே காந்தி கதை' புத்தகங்கள், பாடல்கள் மூலமாகவே கதை சொல்லும் வித்தியாசமான முயற்சி. குழந்தைப் பாட்டு மட்டுமில்லாம ‘நீலா மாலா', ‘நல்ல நண்பர்கள்' போன்ற கதைப் புத்தகங்களையும் அவர் எழுதியிருக்கார். அப்பா-அம்மா கிட்ட கேட்டு, தேடிப் படிச்சுப் பாருங்க. ஜாலியான அனுபவமா இருக்கும்.