மாயா பஜார்

நீங்களே செய்யலாம்: சாய்ந்தாடு நத்தை சாய்ந்தாடு!

செய்திப்பிரிவு

தோட்டங்களில் ஊர்ந்து போகும் நத்தைகளைப் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். அதுபோன்ற ஒரு நத்தையைச் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

பழைய அஞ்சல் அட்டை அல்லது அதுபோன்ற வேறு வண்ண அட்டை, கத்தரிக்கோல், பசை, சிவப்பு வண்ண பென்சில், மார்க்கர் பேனா.

எப்படிச் செய்வது?

1. அட்டையை 2.5 * 12 செ.மீ அளவுக்குச் சரியாக வெட்டிக் கொள்ளுங்கள்.

2. அந்தப் பட்டையின் மேல் பக்கம் ‘ப’வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு மார்க்கர் பேனா மூலம் ஒரு கார்ட்டூன் முகம் வரைந்து கொள்ளுங்கள்.

3. இந்தப் பட்டையை ஒரு பென்சில் கொண்டு முழுவதும் சுருட்டிப் பிரித்தால் படகு போல வளைந்து இருக்கும்.

4. இதேபோல் 2.5 * 12 செ.மீ. அளவுள்ள வேறு ஒரு பட்டையை வெட்டி எடுத்து, சிவப்பு வண்ணம் பூசிக் காய வைக்கவும்.

5. படத்தில் காட்டியபடி வளையல் போல வளைத்து இரு முனைகளையும் வெள்ளை பசை கொண்டு ஒட்டுங்கள்.

6. இந்த வளையத்தைப் படகு போல வளைத்து வைத்திருக்கும் பட்டையின் வளைந்த நடுப்பக்கத்தில் ஒட்டிக் காயவையுங்கள்.

இப்படி நீங்கள் தயாரித்த நத்தையை மேசை மீது வைத்து லேசாக அசைத்துவிட்டால் நத்தை அழகாகச் சாய்ந்தாடும்.

என்ன குழந்தைகளே! நத்தையைச் செய்துபார்க்கத் தயாராகிவிட்டீர்களா?

SCROLL FOR NEXT