மாயா பஜார்

புத்தகங்களை நேசிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

எஸ்.கோபாலகிருஷ்ணன்

புத்தகத்தைக் கண்டாலே சில மாணவர்களுக்கு வெறுப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்ன? நமது கல்வி முறையும், கற்பிக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும்தான் காரணம் என்ற கருத்து பரவலாக இருந்துவருகிறது. ஆனால், ஆசிரியரையும் புத்தகங்களையும் இரு கண்களாக பாவிக்கும் மனப்பக்குவத்துடன் திருவாரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர்.

கடந்த ஏப்ரல் முழுவதும் உலகப் புத்தக மாதம் கொண்டாடப்பட்டது அல்லவா? அந்தச் சமயத்தில் மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியிலும், அருகில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்று தாங்கள் படித்த புத்தகங்களை விமர்சனம் செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார்கள். இந்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வீட்டுக்கொரு புத்தகம்’ திட்டம்தான் இதற்கெல்லாம் அடிப்படையாக. அது என்ன திட்டம்?

மேலராதாநல்லூர் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று பணம் பெற்று புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவர்களைப் படிக்கத் தூண்டுகிறார்கள் மாணவர்கள். நீங்கள் படிக்கவில்லை என்றாலும் உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்குப் படிக்கக் கொடுக்க வேண்டும் என்பது இவர்களின் அன்பு வேண்டுகோள். அந்தப் புத்தகம் படிக்கப்பட்டுவிட்டால் மற்றொரு வீட்டிலிருந்து புத்தகத்தை மாற்றிக்கொடுக்கிறார்கள்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவர்களை எப்படியாவது புத்தகம் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு, கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இம்மாணவர்களைப் படிக்க வைத்துள்ளனர் ஆசிரியர்கள். இந்தப் புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகள் தொடர்பானவை. இந்தப் புத்தகங்களை எழுதிய சில எழுத்தாளர்களையும் வரவழைத்து விவாதித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தொடர்பான நூறு புத்தகங்களைப் படிப்பது என்ற முயற்சியில் தற்போது மாணவர்கள் இறங்கியுள்ளார்கள். மாணவர்களின் இந்த ஆர்வத்தையும், அரசுப் பள்ளியின் இந்த முயற்சியையும் அறிந்து பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிகின்றன.

வாசிப்பை நேசிக்கக் கற்றுத்தரும் இந்த முயற்சியை மாணவர்களிடத்தில் செயல்படுத்திவரும் இந்தப் பள்ளியின் ஆசிரியர் மணிமாறனிடம் இது குறித்துக் கேட்டோம்.

“முதன்முதலில் புத்தக வாசிப்பு குறித்த ஆர்வத்தை உருவாக்க வாசிப்பு முகாம் நடத்தினோம். அதன் மூலம் பல்வேறு சிறுவர் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கவைத்தோம். இரண்டு ஆண்டுகளில் மாணவர்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த வாசிப்புப் பழக்கத்தால் பாடப் புத்தகங்களைப் புரிந்துகொண்டு படிக்கும் ஆற்றல் அதிகரித்திருக்கிறது. மாணவர்கள், தாங்கள் படிக்கும் சிறுகதைகளை நாடகமாக மாற்றி நடிக்கப் பழகுகிறார்கள். எவ்வளவு பக்கங்கள் உள்ள புத்தகங்களாக இருந்தாலும் அவற்றின் மையக் கருத்து என்ன என்பதை உள்வாங்கிக்கொள்ளும் திறன் மேம்பட்டிருக்கிறது.

எங்கள் பள்ளி மாணவர்கள் புத்தகங்களைப் படித்து விமர்சனம் செய்வது குறித்து அறிந்த திரு.வி.க. அரசுக் கல்லூரிப் போராசிரியர்கள் தாங்களே நேரில் வந்து மாணவர்களின் திறனைப் பார்த்துப் பாராட்டிவிட்டுச் சென்றனர். மாணவர்கள் சுற்றுச்சூழல் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து அவற்றைப் பற்றி மதிப்புரையாற்றுவதை அறிந்த தஞ்சை மண்டல வனத்துறை அதிகாரிகள் ஐம்பது மாணவர்களைத் தஞ்சை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்துப் பாராட்டு விழா நடத்தி, சான்றிதழும் கேடயமும் வழங்கியுள்ளார்கள்.

எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன், குழந்தை எழுத்தாளர் நடராஜன், சுற்றுச்சூழல் ஆர்வலர் நக்கீரன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியரும் நடிகருமான வேலு சரவணன் போன்றவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்திருக்கிறார்கள். தஞ்சை பாரத் கல்லூரியிலும் மாணவர்களை வரவழைத்துப் புத்தக விமர்சனம் செய்ய வைத்திருக்கின்றனர். மத்திய பல்கலைக்கழகமும் கடந்த 29-ம் தேதி இந்த மாணவர்களை அழைத்துப் பாராட்டிக் கவுரவப்படுத்தியது. இவை போன்ற பாராட்டுக்கள் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிக அளவில் தூண்டியிருக்கின்றன” என்றார் மணிமாறன்.

மேலும், “புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டாத குழந்தைகளிடத்திலும் புத்தக ஆர்வத்தைத் தூண்ட வேண்டுமென்றால் இந்தக் கோடை விடுமுறையில் நகைச்சுவை உணர்வையும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டும் புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும். கூடவே, பெற்றோர்களும் சேர்ந்து படித்து பிள்ளைகளுடன் தங்கள் வாசிப்பறிவைப் பகிர்ந்துகொண்டால் வரும் கல்வி ஆண்டில் பாடப் புத்தகத்தில் உள்ள கடினமான பகுதிகளையும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படுவதோடு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் அவர்களிடம் ஆழமாக ஊன்றிவிட முடியும்” என்றார் மணிமாறன்.

- ஆசிரியர் மணிமாறன்

குழந்தைகளின் திறன்களில் மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். கற்பனைத் திறனை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டிருக்கும் குழந்தைகளே எதிர்காலத்தில் பெரும் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளும் சமமான அளவில் கற்பனைத் திறன் கொண்டிருந்தாலும் வீட்டுச் சூழலும் கல்விச் சூழலும் சமூகமும் அந்தத் திறனைப் போகப்போகக் குறைத்துவிடுகின்றன. புத்தகங்கள், முக்கியமாக கற்பனையும் மாயாஜாலங்களும் நிரம்பியிருக்கும் கதைகள், குழந்தைகளின் கற்பனையை அதிகப்படுத்தக்கூடியவை.

ஆகவே, பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் சரி நல்ல புத்தகங்களையும் கதைகளையும் குழந்தைகளிடம் எடுத்துச் சென்றால் அவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் சமூக மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்துத் திறன்களிலும் சிறந்து விளங்குவார்கள் என்பதற்கு மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாட்சி. இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கையில்தான் எதிர்கால இந்தியா இருக்கிறது!

SCROLL FOR NEXT