வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் என இப்போதெல்லாம் குழந்தைகளின் விளையாட்டுப் போக்கு மாறிவிட்டது. பள்ளிகளிலும் படிப்புக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஓடியாடிச் சிறார்கள் விளையாடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. ஆனால், சில பள்ளிகள் விதிவிலக்காகச் சிறார்கள் அந்தக்கால சிறுவர் விளையாட்டுகள் விளையாட அனுமதிப்பதும் உண்டு. அண்மையில் மதுரை இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ‘மரபு விளையாட்டுத் திருவிழா’ நடைபெற்றது.
இந்த விளையாட்டுத் திருவிழாவில் பம்பரம் , கில்லி, கோலி , பிள்ளையார் பந்து, டயர் வண்டி ஓட்டுதல் , பச்சைக்குதிரை , கிளியாந்தட்டு, நொண்டி , தாயம் , பல்லாங்குழி, மூலைக்கல் , ஜூட் நொண்டி, வளையலைச் சோடி சேர்த்தல், வளையலை நிறுத்துதல், கிச்சுகிச்சு தாம்பலம், பூப்பறிக்க வருகிறோம் போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன.
இதுபோன்ற விளையாட்டுகளை அதிகம் விளையாடியிராத சிறார்கள் ஆர்வமாகப் பங்கேற்று இந்தத் திருவிழாவில் விளையாடினார்கள். சிறார்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு, ஊதா என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் விளையாடினார்கள். டயர் வண்டி ஓட்டும் போட்டி நடைபெற்றபோது மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது போல ஓட்டிச் சென்றார்கள். இப்படி ஒவ்வொரு விளையாட்டையும் ஈடுபாட்டுடன் விளையாடினார்கள் சிறார்கள்.
அதிகப் புள்ளிகள் பெற்ற அணியினருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மரபு வழி விளையாட்டுகளை மறக்காமல் இருக்கவும், உடலுக்குப் பயிற்சியாக அமையும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடவும் விழாவின் முடிவில் சிறார்கள் உறுதியேற்றார்கள்.
- மு.மகேந்திர பாபு