வண்ண வண்ண பொம்மையாம்
வட்ட முக பொம்மையாம்
கண்ணைக் கவரும் பொம்மையாம்
கருத்தாய் பேசும் பொம்மையாம்!
பொன்னாய் மின்னும் பொம்மையாம்
புதிதாய் வாங்கிய பொம்மையாம்
கன்னம் சிவந்த பொம்மையாம்
கனிவாய் பேசும் பொம்மையாம்!
மங்கை உருவ பொம்மையாம்
மனம் கவர்ந்த பொம்மையாம்
தங்கை விரும்பும் பொம்மையாம்
தலையை ஆட்டும் பொம்மையாம்!
அன்னை தந்த பொம்மையாம்
அழகு மிளிரும் பொம்மையாம்
தன்னையே சுற்றும் பொம்மையாம்
தரையில் ஆடும் பொம்மையாம்!
ஆடை அணிந்த பொம்மையாம்
அழகாய் சிரிக்கும் பொம்மையாம்
நடனம் ஆடும் பொம்மையாம்
நான் விரும்பும் பொம்மையாம்!
தம்பி ரசிக்கும் பொம்மையாம்
தங்கை போற்றும் பொம்மையாம்
எம்மைக் கவர்ந்த பொம்மையாம்
எங்கும் காணா பொம்மையாம்!
- மு.நாகூர், சுந்தரமுடையான்