மாயா பஜார்

வகுப்பறைக்கு வெளியே: ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டது ஏன்?

ஆதி

ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜீன் பாப்டிஸ்ட் லமார்க் (1744-1829), உயிரியல் துறை முன்னோடி; டார்வினுக்கு முன்பே பரிணாமவியல் கொள்கையின் சில அம்சங்களை முன்வைத்தவர்; ‘உயிரியல்’ என்ற சொல்லுக்கு வித்திட்டவர், முதுகெலும்பில்லாத உயிரினங்களுக்கு ஆங்கிலத்தில் ‘Invertebrate’ என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்.

இவர் ராணுவ வீரர். 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்குப் போர்க்களத்தில் போரிட்டார். போரில் அவருடைய பங்களிப்பை அங்கீகரித்தே ‘ஜீன் பாப்டிஸ்ட்’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. காயமடைந்த பிறகு ராணுவத்தில் இருந்து விலகினார்.

இயற்கையாளர் பெர்னார்ட் தி ஜஸ்ஸியிடம் தாவரவியல் படித்தார். 10 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக அவர் எழுதிய ‘ஃபிரான்ஷுவா ஃபுளோர்’(1778) என்ற மூன்று பாகங்கள் கொண்ட நூல், பிரான்ஸ் நாட்டுத் தாவரங்களைப் பற்றி விரிவாகப் பேசியது. முன்னணி இயற்கையாளராக லமார்க் மாறினார்.

டார்வினுக்கு முன்பே

1801-ல் பரிணாமவியல் கொள்கையை லமார்க் முன்வைத்தார். 1809-ல் ‘விலங்கியல் தத்துவம்’ என்ற நூலில் அதை விரிவுபடுத்தி எழுதினார். எதுவும் அற்புதங்களால் நிகழவில்லை. ஓர் உயிரினத்திலிருந்துதான் மற்றொரு உயிரினம் வந்தது; இயற்கை விதியின் காரணமாகவே இது நடந்துள்ளது என்ற கொள்கையை முன்வைத்தார்.

வாலில்லாக் குரங்குகளில் இருந்தே மனிதர்கள் தோன்றினர் என்ற கருத்தையும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டார். கால்களால் மரத்தில் ஏறுவதையும் கிளைகளைப் பற்றுவதையும் சூழ்நிலை காரணமாகக் கைவிட்டு, காலப்போக்கில் கால்களால் நடப்பது, கைகளால் மற்ற செயல்களைச் செய்யும் வகையில் மாறியதும், மனிதர்கள் நிமிர்ந்து நிற்கத் தொடங்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்கம்

பின்னாளில் சார்லஸ் டார்வின் முன்வைத்த இயற்கைத் தேர்வுக் கொள்கையே, பரிணாமவியல் கொள்கையின் அடிப்படையாக மாறியது. அதேநேரம் உயிரினங் களிடம் சுற்றுச்சூழலின் தாக்கம் இருக்கும் என்பதை முதன்முதலில் சொன்னவர் லமார்க்தான்.

அவர் முன்வைத்த பரிணாமவியல் கொள்கைப்படி ஓர் உயிரினம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப எதிர்வினையாற்றித் தகவமைத்துக் கொள்வதாலேயே குறிப்பிட்ட சில குணாம்சங்களைப் பெறுகிறது. இந்தத் தகவமைப்பு ஒன்று மரபு வழியாக வருகிறது அல்லது புதிய தகவமைப்பு அடுத்த சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது என்றார்.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து

தன்னுடைய கொள்கைக்கு ஒட்டகச்சிவிங்கிகளை லமார்க் உதாரணம் காட்டினார். ஒட்டகச்சிவிங்கிகளுக்கு நீண்ட கால்களும், நீண்ட கழுத்தும் இருப்பதற்குக் காரணம், தலைமுறை தலைமுறையாக உயரமான மரக்கிளைகளில் உள்ள இலைகளை உடலை எக்கி எக்கி அவை உண்டு வந்தன. அதன் காரணமாகவே அவற்றின் காலும் தலையும் நிரந்தரமாக நீண்டுவிட்டன, பிறகு அந்தப் பண்பு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டதே ஒட்டகச்சிவிங்கி உயரமானதற்குக் காரணம் என்றார் லமார்க்.

பெற்றோர் உயிரினங்களிடையே ஏற்பட்ட தகவமைப்பு வாரிசுகளுக்கும் கடத்தப்படும் என்ற அவருடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதே நேரம், டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையின்படி இயல்பிலேயே நீண்ட கால்கள், நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகச்சிவிங்கிகளுக்கு உணவு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அவை அதிகக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. இதன் தொடர்ச்சியாகப் பிழைத்திருக்க வாய்ப்புள்ள ஒட்டகச்சிவிங்கிகள் அதிகம் உருவாகின்றன. இப்படி சிறந்த உயிரினத்தை இயற்கையே தேர்ந்தெடுக்கிறது என்பது டார்வினின் வாதம்.

லமார்க் சொன்னது நடந்ததா?

இந்த வகையில் டார்வினின் கொள்கைக்கு நேரெதிராக லமார்க்கின் கொள்கை அமைந்திருக்கிறது. உடலின் ஒரு அமைப்புக்கோ, உறுப்புக்கோ அதிகப் பயன்பாடு இல்லை என்றால் அவை குறுகிவிடும், இல்லாமல் போய்விடும் என்றார் லமார்க். அவர் சொல்வதன்படி சுற்றுச்சூழல் மாறிக்கொண்டே இருப்பதால், அனைத்து உயிரினங்களும் அதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு உயிர் பிழைத்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில், எல்லா உயிரினங்களாலும் தகவமைத்துக்கொள்ள முடியவில்லை. டார்வின் சொல்வதைப்போலப் பல உயிரினங்கள் இயற்கை நெருக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் முற்றிலும் அழிந்து போயும் உள்ளன.

சுற்றுச்சூழல் தாக்கம் காரணமாக ஓர் உயிரினத்தின் உடலில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதைத் தன்னுடைய கொள்கையின் முக்கிய அம்சமாக லமார்க் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாகச் சிறிய நுண்ணுயிர் பெரிய உயிரினமாக உருமாறிவிடும் என்ற கொள்கையிலேயே அவர் கூடுதல் கவனம் செலுத்தினார்.

எப்படியிருந்தாலும் பரிணாமவியல் கொள்கையை அறிமுகப்படுத்தியது, ஓர் உயிரினம் வாழும் சுற்றுச்சூழல் அந்த உயிரினத்திடம் தாக்கம் செலுத்துகிறது என்பன போன்ற கொள்கைகளை வலியுறுத்தியதற்காக லமார்க்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

SCROLL FOR NEXT