சென்னையில் குழந்தைகளை மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா. ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்காதான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டது.
இங்கு ஆயிரத்து 675 வகையான உயிரினங்கள் உள்ளன. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ் உயிரிகள், மீன்கள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இங்கே சில விலங்குகளைப் பார்க்கவே மிகவும் ஆர்வமாக இருக்கும். நீர்யானை, அதன் குட்டி, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகளைப் பார்க்கத் தவறி விடவே கூடாது.
அது மட்டுமல்ல, சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு ஆகியவை மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. 602 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை சைக்கிளில் பயணம் செய்தும் பார்க்கலாம். இதற்காகக் குட்டி சைக்கிள்கள்கூட வாடகைக்குக் கிடைக்கும். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை விலங்கியல் பூங்கா திறந்திருக்கும். இரண்டு வயது முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு நுழைவுக் கட்டணம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம். சவாரிகளுக்குத் தனிக் கட்டணம்.
ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. காலையில் சென்றால், மாலைவரை குதூகலமாக இருக்க வண்டலூர் பூங்கா குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற இடம்.