பொதுவாகக் கணிதம் சிலருக்குப் பிடிக்காது – வேப்பங்காய் போலக் கசக்கும். இன்னும் சிலரோ வரலாற்றைக் கண்டாலே வருத்தப்படுவார்கள். அறிவியல் சிலரிடம் ஆர்வத்தைத் தூண்டாது. புவியியல்-சமூகவியல் எல்லாம் நமக்கு எதற்கு என்று பலர் கேட்பார்கள். ஆனால், இந்தத் துறைகளில் ஏற்படும் ஒவ்வொரு வளர்ச்சியும் நம் வாழ்க்கையை மாற்றி வருகின்றன.
மேற்கண்ட பாடங்கள் குறித்து வகுப்பறையில் நாம் படிப்பவை, நம்மைச் சுற்றியுள்ள மாபெரும் உலகத்தின் ஒரு பகுதி மட்டுமே. அந்தத் துறைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான அறிமுகமாகப் பாடப்புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். நாம் இந்த உலகை எப்படிப் புரிந்துகொள்ளலாம், எந்தப் பாதையின் வழியாகச் செல்லலாம் என்பதற்கான திறவுகோலைக் கல்வி நமக்கு வழங்குகிறது.
புதிய உலகம்
பாடப் புத்தகங்களில் உள்ளதைத் தாண்டி உலகம் மிகப் பெரியது. வாசிப்பதன் மூலம் மட்டுமே இந்த உலகின் பல்வேறு நுணுக்கங்களையும், நமக்குப் பிடித்த துறை சார்ந்தும் ஆழமாகவும் விரிவாகவும் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு உதவும் வகையிலேயே ‘வகுப்பறைக்கு வெளியே’ தொடர் கடந்த ஆறு மாதங்களாக வெளியானது.
இந்தத் தொடரில் நாம் அதிகம் அறியாத பல அறிவியல் அறிஞர்கள், மறந்துவிட்ட மாபெரும் வரலாற்று சம்பவங்கள், கணிதச் சுவாரசியங்கள், புவியியல்-சமூகவியல் குறித்து மாதம்தோறும் பல்வேறு புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம்.
வாசிப்பின் வாசல்
எந்தத் துறையும் நமக்கு அவசியமற்றவை என்பதில்லை. பல்வேறு துறைகளைப் பற்றி சுவாரசியமாகத் தெரிந்துகொள்ள உதவுபவை புத்தகங்கள். பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு தகவலைப் பற்றிய கூடுதல் அம்சங்களைப் பல்வேறு புத்தகங்களில் விரிவாக வாசித்துத் தெரிந்துகொள்ள முடியும்.
புத்தகங்கள் இல்லாத அந்தக் காலத்தில், காகிதச் சுருள்கள் அடங்கிய ஒரு முதுகுச் சுமையைத் தூக்கிக்கொண்டு, இந்தியாவெங்கும் புத்த அடையாளங்களைத் தேடி அலைந்தவர் சுவான் சாங் (யுவான் சுவாங்). அதுபோன்ற சிரமங்கள் இன்றைக்கு இல்லை. நம் பள்ளி நூலகம், வீட்டுக்கு அருகிலேயே அரசு நூலகம், வாடகை நூலகம் முதல் விக்கிபீடியா போன்ற இணைய நூலகம்வரை பல்வேறு நூலகங்கள் வந்துவிட்டன.
இவற்றின் உதவியுடன் தொடர்ந்து எல்லாத் துறைகளைப் பற்றிய அடிப்படை விஷயங்களையும் உங்களுக்குப் பிடித்த துறை பற்றித் தொடர்ச்சியாகவும் வாசித்து வாருங்கள். அது உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடியதாகவும் நீங்கள் பின்னர்ப் பார்க்கப் போகும் வேலையைத் தீர்மானிப்பதாகவும் அமையலாம்.
(நிறைவடைந்தது)