மாயா பஜார்

சோம்பேறிகளுக்குக் கிடைத்த வரம்!

மு.முருகேஷ்

கோமளபுரம் அழகிய சிறிய நகரம். அந்த நகரத்தில் மூன்று சோம்பேறிகள் இருந்தனர். மூவரும் எந்த வேலைக்கும் போக மாட்டார்கள். வேலை செய்பவர்களைப் பார்த்துக் கேலி செய்வதுதான், இவர்களின் வேலை. அதில், ஒருவன் பேராசை பிடித்தவன். மற்றொருவன் பொறாமைக் குணம் கொண்டவன். மூன்றாவது ஆள் சுயநலக்காரன்.

பேராசைக்காரனுக்கோ எவ்வளவு கிடைத்தாலும் போதாது. ‘இன்னும் வேணும், இன்னும் வேணும்…’என்று அலைகிற மனம் கொண்டவன்.

பொறாமைக்காரனுக்கு, அடுத்தவர் பொருள் மேல் எப்போதும் ஆசை. ஆள் அசந்த நேரமாக பார்த்து, மற்றவர்களுடைய பொருளையும் சேர்த்துச் சுருட்டிக்கொள்வான்.

‘ஊரில் வேறு யாரும் சந்தோஷமாக இருந்துவிடக் கூடாது, தான் மட்டும்தான் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்கிற நினைப்பு உடையவன் சுயநலக்காரன்.

ஒருநாள்...

மூவரும் சேர்ந்து ஏதாவது தொழில் செய்யலாமென்று முடிவெடுத்தார்கள்.

“என்னால் பணம் எதுவும் தர முடியாது.வேணும்னா தொழில் தொடங்க யோசனை மட்டும் சொல்றேன். ஆனால், வர்ற லாபத்தில் பாதி எனக்குத் தந்திடணும்…!”

என்று சொன்னான் பேராசைக்காரன்.

“என்னால் குனிஞ்சு நிமிந்து வேலையெல்லாம் செய்ய முடியாது. வேலைக்கு வேற ஆட்களைப் போடுங்க. அவங்கக்கிட்டே நல்லா வெரட்டி வேலை வாங்க எனக்குத் தெரியும்…!” - இது பொறாமைக்காரன்.

‘நீ தொழில் செய்ய பங்குப் பணம் தர மாட்டே. நீ வேலையே செய்ய மாட்டே…நான் மட்டுமென்ன இளிச்சவாயனா…?’

என்று மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்ட சுயநலக்காரன் எதுவும் சொல்லாமல் ‘உம்’ மென்று இருந்தான்.

தொழில் எதுவும் செய்யாமலேயே பணக்காரனாக முடியுமா…?

முதல் போடாமலேயே நிறைய லாபம் அடைய என்ன தொழில் செய்யலாம்…? என்பது போன்ற குழப்பங்களோடு, மூவரும் குளிக்கக் கிணற்றுக்குப் போனார்கள்.

அப்போது...

திடீரென கிணற்றுக்குள்ளிருந்து ஒரு அழகான தேவதை தோன்றியது. துயரத்தில் இருப்பவருக்கு வரம் தந்து உதவுகிற தேவதை அது.

“வெவ்வேறு குணம் படைத்த நீங்கள் மூவரும் இன்றைக்கு ஒன்றாகச் சேர்ந்து, ஒரு தொழில் தொடங்க முடிவெடுத் திருப்பது நல்ல செயல். உங்களின் ஒற்றுமையை மெச்சி, உங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்...” என்றது தேவதை.

மூவர் முகத்திலும் அளவில்லா மகிழ்ச்சி பொங்கியது. ‘ஆகா…கிடைச்சது அதிர்ஷ்டம். இப்ப கேக்கிற வரத்தை வச்சு, இனி எந்த கஷ்டமும் படாம நம்ம வாழ்க்கைய ஓட்டிடணும்…’ என்று நினைத்துக்கொண்டார்கள்.

‘என்ன வரம் கேட்பது…?’ என்று மூவரும் யோசிக்கத் தொடங்கினார்கள்.

“வரம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்…” என்றது தேவதை.

பேராசைக்காரன், “இந்த உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அளவுக்கு பொன்னும், பொருளோடும், நீண்ட ஆயுளோடும் வாழ்கிற வரம் வேண்டும்…” என்றான்.

உடனே, தேவதை “நீ கேட்ட வரத்தை அளித்தேன்…” என்றது. பேராசைக்காரனுக்கு பெரும் மகிழ்ச்சி.

பொறாமைக்காரனுக்கோ மனம் தாங்கவில்லை.

“ஏராளமான பொன்னோடும், பொருளோடும், நீண்ட ஆயுளோடும் வாழ்கிற என் நண்பனே என்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிற அளவுக்கு வசதியும் ஆயுளும் கொண்ட, இப்பூமியின் கடைசி மனிதனாக நான் வாழ வேண்டும்…” என்கிற வரத்தைக் கேட்டான் பொறாமைக்காரன்.

“உனக்கும் கேட்ட வரத்தைத் தருகிறேன்…”என்றது தேவதை.

பொறாமைக்காரனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

சுயநலக்காரனோ ‘என்ன வரம் கேட்பது ?’ என்று பலமாக யோசித்தான்.

“சீக்கிரமாக வரத்தை கேள்; நான் போக வேண்டும், நேரமாகி விட்டது…” என்றது தேவதை.

யோசித்து யோசித்து குழம்பிய சுயநலக்காரன், சட்டென முடிவெடுத்து ஒரு வரம் கேட்டான்.

“இவர்கள் இருவருக்கும் கொடுத்த வரங்களைத் திருப்பி வாங்கிவிடுங்கள். இதுவே எனக்கான வரம்…” என்றான்.

“அப்படியே ஆகட்டும்…” என்று, இருவருக்கும் கொடுத்த வரங்களைத் திருப்பி வாங்கிக்கொண்டு மறைந்தது தேவதை.

‘உள்ளதும் போச்சே…!’ என்கிற மன வருத்தத்துடன் வெறுங்கை யோடு வீடு திரும்பினார்கள் மூவரும்.

SCROLL FOR NEXT