மாயா பஜார்

பரிசோதனை புத்தகங்கள்: நாமே சோதித்து அறியலாம்

ஆதி

விளையாட்டு வழி அறிவியல்

விளையாட்டாக அறிவியலைப் புரிந்துகொள்ளவோ, கற்கவோ முடியுமா? முடியும் என்று குழந்தைகளுக்கு வழிகாட்டுகிறது இந்த நூல். இதை எழுதியிருப்பவர், குழந்தைகளுக்கு எளிய முறையில அறிவியலை எழுதிப் புரிய வைப்பதில் வல்லவரான முனைவர் அ. வள்ளிநாயகம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்.

அறிவியல் விதிகளை, உண்மைகளை இந்த நூல் சுலபமாக விளக்குகிறது. அறிவியல் மனப்பான்மை வளர இதுபோன்ற நூல்கள் நிச்சயம் உதவும். குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் ஏ.வி.எம். அறக்கட்டளையின் முதல் பரிசைப் பெற்ற அறிவியல் நூல் இது.

பழனியப்பா பிரதர்ஸ், தொடர்புக்கு: 044-43408000

மலிவான பொருட்களால் மகிழ்வு தரும் சோதனைகள்

வேதியியல் பேராசிரியரான மு. ராஜேந்திரன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளைத் தேடிச் சென்று சாதாரண பொருட்களைக் கொண்டு பரிசோதனைகளை நிகழ்த்தி அறிவியலை எளிய முறையில் புரிய வைத்தவர். அவர் எழுதிய புகழ்பெற்ற நூல் இது. இந்த நூலில் உள்ள பரிசோதனைகளைச் செய்து பார்க்க பெரிய ஆய்வுக் கூடமோ, அறிவியல் கருவிகளோ தேவையில்லை. நம் வீட்டில் கிடைக்கும் சாதாரணப் பொருட்களைக் கொண்டே 40 அறிவியல் பரிசோதனைகளை மாணவர்களே செய்து பார்க்கலாம். இவற்றைச் செய்து பார்க்கும்போது, அறிவியல் இவ்வளவு எளிதா என்று ஆச்சரியம் ஏற்படும்.

புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

யுரேகா அறிவியல் பரிசோதனைகள்

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?, கீழே விழ மறுக்கும் பந்து, வளைந்த பென்சில், ஸ்டிராவில் சங்கீதம், ஊதாமல் பெரிதாகும் பலூன், பிரிக்க முடியாத புத்தகங்கள், பயந்தோடும் தீக்குச்சி என்பது உள்ளிட்ட ஜாலியான பரிசோதனைகள், பெர்னொலியின் தத்துவம், கலிலியோ சோதனை, நியூட்டன் விதி உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகளின் தத்துவங்களை விளக்கும் அறிவியல் பரிசோதனைகள் உட்பட 35 எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துபார்க்க உதவும் வழிகாட்டி.

யுரேகா புக்ஸ், தொடர்புக்கு: 044-28601278

கண்ணா மூச்சி விளையாட்டு

வண்ணப்பூக்களை உருவாக்குதல், தானாக இணையும் தண்டவாளங்கள், அந்தரத்தில் மிதக்கும் விரல், கூண்டுக்குள் பறவையை கொண்டுவருதல் என்பது உள்ளிட்ட 20 சுவாரசியமான பரிசோதனைகள் மூலம் விளையாட்டு வழி அறிவியலைப் புரிந்துகொள்ள கே. காத்தவராயன் எழுதியுள்ள நூல்.

அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 044-28113630

SCROLL FOR NEXT