திமிங்கிலம் என்றாலே பலருக்கும் பயம்தான் வரும். ஆனால், ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் திமிங்கிலம் என்றால் திருவிழாதான் ஞாபகத்துக்கு வருமாம். அப்படி என்ன திருவிழா என்றுதானே நினைக்கிறீர்கள்? அந்தத் திருவிழாவின் பெயர் திமிங்கிலத் திருவிழா! எந்த நாட்டில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது தெரியுமா? தென் ஆப்ரிக்காவில்!
தென் ஆப்ரிக்காவில் வெஸ்டர்ன் கே என்ற மாகாணம் உள்ளது. இங்கே உள்ள தெற்குக் கடற்கரையில் ஹெர்மானஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குதான் ‘திமிங்கிலத் திருவிழா’. ஹெர்மானஸ் திமிங்கிலத் திருவிழா (Hermanus whales festival) என்ற பெயரில் நடக்கும் இந்தத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாத இறுதியில் இந்த விழா நடைபெறுகிறது.
திமிங்கிலங்கள் தங்களின் இனப்பெருக்கக் காலத்தில் ஹெர்மானஸ் வளைகுடாவுக்கு வந்துவிடுகின்றன. அந்தச் சமயம் கடற்கரைக்கு மிகவும் அருகில் திமிங்கிலங்கள் வரும். பொதுவாக ஆழ்கடலில் வாழும் திமிங்கிலங்கள் உலகில் வேறு எங்குமே இந்த அளவுக்குக் கரையை நெருங்கி வருவதில்லை. இப்படிக் கரைக்கு வரும் திமிங்கலங்களை வரவேற்பதற்காக ‘கன்றுகள் விழா’ என்ற பெயரில் அப்பகுதி மக்கள் விழா எடுத்தார்கள். அந்த விழா பெயர் மாறி இப்போது உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.
இந்தத் திருவிழாவின்போது ஆப்ரிக்க மக்கள் ஆடி, பாடி மகிழ்கிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் ‘திமிங்கலத் திருவிழாக்கள்’ நடைபெற்றாலும், ஹெர்மானஸ் நகரத் திருவிழாவுக்கு மட்டும் வரவேற்பு அதிகம்.
தகவல் திரட்டியவர்: எஸ். கலைச்செல்வி, 8-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேடவாக்கம், சென்னை.