படிப்பு, விளையாட்டு மட்டும் போதாது. அவற்றுடன் அறிவியல் தொடர்பான விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கிறது அல்லவா? எதிர்காலத்தில் விஞ்ஞானியாக வேண்டும் என்றும் உங்களில் பலர் விரும்புவீர்கள். உங்களை மகிழ்விக்கவே ஒரு குட்டி விஞ்ஞானியான ‘டெக்ஸ்டர்’ என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை கென்டி தார்த்தாகோவ்ஸ்கி என்ற கார்ட்டூன் மேதை உருவாக்கினார். இவர் ரஷ்யாவைச் சேர்ந்த கார்ட்டூன் கலைஞர்.
‘டெக்ஸ்டர்ஸ் லேபரட்டரி’ என்ற இந்த கார்ட்டூன் தொடரில் வரும் குட்டி விஞ்ஞானி டெக்ஸ்டர் தனது பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக ஒரு அறிவியல் பரிசோதனைக் கூடத்தை நடத்துவான். அதிநவீன உபகரணங்கள் அடங்கிய அந்த பரிசோதனைக் கூடம் அவனது படுக்கை அறையில் உள்ள புத்தக அலமாரிக்குப் பின் இருக்கும். அலிபாபா குகை போலவே இந்த அலமாரிக்கு முன்பாக நின்று ‘பாஸ்வேர்டு’ ஒன்றைச் சொன்னால்தான் பரிசோதனைக் கூடத்துக்குச் செல்ல முடியும்.
டெக்ஸ்டருக்குப் போட்டியாக இருப்பது அவனுடைய அக்கா டீ டீ தான். பாஸ்வேர்டு சமாச்சாரங்களையெல்லாம் எளிதாக முறியடித்துத் தன் தம்பியின் பரிசோதனைக் கூடத்துக்குள் புகுந்து அவனுக்குத் தொல்லை தருவாள். எனினும் அவ்வப்போது அவனது கண்டுபிடிப்புகளில் உதவவும் செய்வாள். என்ன இருந்தாலும் அக்கா ஆச்சே!
அதனால், தனது அன்புத் தொல்லை அக்காவை டெக்ஸ்டர் வெறுப்பதில்லை. அவளுக்கு ஆபத்து ஏற்பட்டால் அவளைக் காப்பாற்ற முன் நிற்பது டெக்ஸ்டர்தான்.
இதே போன்ற ஒரு ரகசிய பரிசோதனக் கூடத்தை நடத்தும் மண்டார்க் என்ற மற்றொரு சிறுவன் டெக்ஸ்டரின் பகைவன். இவனைச் சமாளிப்பதுதான் நம் குட்டி விஞ்ஞானி டெக்ஸ்டரின் முழுநேரப் பணி.
புத்திசாலித்தனமும் நல்ல குணமும் நிறைந்த இந்தக் குட்டி விஞ்ஞானியை உங்களுக்குப் பிடிக்குமா?