மாயா பஜார்

வகுப்பறைக்கு வெளியே: சுதந்திர இந்தியாவின் 10 சாதனைகள்

ஆதி

>> காடுகளைக் காக்க வலியுறுத்திய இயக்கமான சிப்கோ, 1974-ல் இமயமலை அடிவாரத்தில் தொடங்கியது. மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, மரம் வெட்ட வந்தவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டம், இந்தியச் சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு முன்னோடி.

>> அன்னை தெரசாவின் மனிதநேய சேவைகளைப் பாராட்டி 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

>> இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் உலகக் கோப்பையை வென்றது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று ஆச்சரியப்படுத்தியது.

>> இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா, 1975-ல் ஏவப்பட்டது. இன்றைக்கு 104 செயற்கைக்கோள்களை ஒரே முறையில் ஏவி இந்தியா உலக சாதனை படைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

>> இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும் நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றார். ரஷ்யாவின் சோயுஸ் டி 11 விண்கலக் குழுவுடன் 1984-ல் அவர் விண்வெளிக்குச் சென்றார். இன்றுவரை விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்திய வீரர் அவர் மட்டுமே.

>> 1980-களின் மத்தியில் தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியால் நாடெங்கும் ‘பொதுத் தொலைபேசி மையங்கள்’ உருவாக்கப்பட்டன. இது மக்களிடையே தொலைத்தொடர்பை அதிகரித்தது. 2009-ம் ஆண்டில் 50 லட்சம் தொலைபேசி மையங்கள் இருந்தன. தற்போது அது 5 லட்சமாக சரிந்துவிட்டது.

>> முதன்முறையாக செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்குச் சென்று ஆராயும் ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை 2014-ல் ஏவி இந்தியா சாதனை படைத்தது. செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் சுற்றி ஆய்வு செய்யும் முதல் செயற்கைக்கோள் அது.

>> 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை (வெண்கலம்) வென்ற இந்தியர் மல்யுத்த வீரர் கஷாபா ஜாதவ். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவருக்குப் பிறகு அட்லாண்டா ஒலிம்பிக்கில் 1996-ல் லியாண்டர் பயஸ் வென்றதே இந்தியாவுக்கான அடுத்த தனிநபர் வெண்கலப் பதக்கம்.

>> நாட்டிலேயே முதன் முறையாக நோபல் பரிசு பெற்றார் ‘குருதேவ்’ என்றழைக்கப்பட்ட வங்க மகாகவி ரவீந்திரநாத் தாகூர். ‘கீதாஞ்சலி’என்ற கவிதைத் தொகுப்பை எழுதியதற்காக இலக்கியப் பிரிவில் 1913-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

>> 2011-ம் ஆண்டுக்குப் பின்னர் போலியோ வைரஸ் மூலம் எந்தக் குழந்தையும் பாதிக்கப்பட்டதாகப் பதிவு இல்லை. போலியோவிலிருந்து இந்தியா விடுபட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. முன்னதாக, 1994-ல் போலியோ தடுப்பு சொட்டு மருந்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT