மனிதர்கள் எப்படி எண்களைக் கணக்கிட ஆரம்பித்தார்கள், கணக்கிடுவதை எளிமையாக்கப் பல்வேறு வழிமுறைகளை எப்படிக் கையாண்டார்கள் என்பதையெல்லாம் பார்த்தோம். மனிதர்கள் இப்படி எண்களைக் கணக்கிட ஆரம்பித்ததுதான் கம்ப்யூட்டர் எனும் கணினியைக் கண்டறிவதில் கொண்டுவந்து நிறுத்தியது, தெரியுமா? இன்றைக்குக் கணக்கிடுவதற்கு மட்டுமில்லாமல், எதற்கெடுத்தாலும் கணினியைத்தான் நாம் தேடுகிறோம்.
கணினியைக் கண்டறிவதற்கு அடிப்படையாக இருந்தவை கணக்கிடும் கருவிகள்தான். ஏற்கெனவே நாம் பார்த்த, ‘அபாகஸ்' எனும் மணிச்சட்டம் மட்டுமே பல நூற்றாண்டுகளுக்கு நவீன கணக்கிடும் கருவியாகவும் எண்ணும் கருவியாகவும் ஆதிக்கம் செலுத்திவந்தது. அதற்குப் பிறகு சில புத்திசாலி விஞ்ஞானிகள் புதிய கணக்கிடும் கருவிகளைக் கண்டறிந்தார்கள்.
ஜெர்மன் கணிதவியலாளர் வில்ஹெம் ஷிக்கார்ட் 1623-ல் கணக்கிடும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தக் கடிகாரமும், அது தொடர்பான ஆவணங்களும் எரிந்துவிட்டன. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பிறகு 1935-ல் கணக்கிடும் கடிகாரம் தொடர்பான ஷிக்கார்டின் செய்முறைக் குறிப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒரு மாதிரி உருவாக்கப்பட்டது.
கணினியின் முன்மாதிரி
ஷிக்கார்டுக்குப் பின்னர் கணக்கிடும் கருவியை பிளெய்சி பாஸ்கல் கண்டறிந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அந்தக் கருவிக்குப் ‘பாஸ்கலைன்' என்று பெயர் வைக்கப்பட்டது.
பாஸ்கல் ஒரு குழந்தை மேதை. குறிப்பாகச் சிறு வயதிலேயே கணிதத் துறையில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். கூம்புகளைப் பற்றிய ஒரு கணித ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியபோது அவருடைய வயது அதிகமில்லை, வெறும் 16 தான். இந்தக் கட்டுரை அவரைப் பெரிதாகப் பிரபலப்படுத்தியது.
பாஸ்கலுக்கு 19 வயதானபோது கூட்டலையும் கழித்தலையும் மேற்கொள்ளக்கூடிய கருவியை வடிவமைக்கும் நிலையை அவர் எட்டியிருந்தார். அவர் கண்டுபிடித்த அந்தக் கணக்கிடும் கருவியே 400 ஆண்டுகளுக்குப் பிறகு கணினியை உருவாக்குவதற்கான அடிப்படையாக இருந்தது என்று சொன்னால், ஆச்சரியமாகத்தான் இருக்கும். அந்தக் கருவியே படிப்படியாக வளர்ச்சி பெற்று கணினிக்கு அடிப்படையாக மாறியது.
ஏனென்றால் பாஸ்கலின் கணக்கிடும் கருவியைப் போலவே, கணினியின் ஆரம்ப கால மாதிரிகளில் சக்கரங்கள், பல்சக்கரங்கள் போன்ற இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
2000 கிலோ கணினி
கணிதத் தேர்வின்போது மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் கையடக்கக் கணக்கீட்டுக் கருவி (Calculator), கணக்கிடும் வேலையை மட்டுமே செய்யும். அதிலிருந்து மாறுபட்ட அமைப்புடன் கண்டறியப்பட்ட ஆரம்பகாலக் கணினியாகக் கருதப்படுவது 1835-ல் சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய பகுப்பாய்வுக் கருவி (analytical engine)தான். இது நீராவியால் இயங்கியது. துளைகளைக் கொண்ட அட்டைகளைச் சொருகியதன் மூலம் இந்தக் கருவியின் நிரல் (Program) இயங்கியது.
உண்மையான கணினியின் தோற்றம் கொண்ட கணினிகள் 1900-களில் உருவாக்கப்பட்டன. மின்சாரம் மூலம் இயங்கிய இந்தக் கருவிகள் கணக்கீடுகளைச் செய்தன. இந்தக் கருவிகள் மிகப் பெரிய அளவைக் கொண்டவையாகவும், எளிதில் சூடேறுவதாகவும் இருந்தன. அது மட்டுமில்லாமல் திடீர் திடீரென செயல்பாட்டை நிறுத்தியும் கொண்டன. இந்தக் கணினிகள் மிகப் பெரிய இடத்தை அடைத்துக்கொண்டதுடன் விலையும் அதிகமாக இருந்தன. ‘ஐ.பி.எம். 650' என்றழைக்கப்பட்ட ஆரம்பகாலக் கணினியின் எடை 2,000 கிலோ. அன்றைய மதிப்பில் அதன் விலையோ 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (3 கோடி ரூபாய்).
இந்தக் கணினிகள் எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கின. பொதுவாகவே மின்கருவிகள் இரண்டு நிலைகளில்தான் இயங்க முடியும். பூஜ்ஜியம் என்றால் செயல்படாத நிலை, ஒன்று என்றால் செயல்படும் நிலை. இந்த இரண்டு எண்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைக்கும் கணினிகள் இயங்குகின்றன.
அளவு குறைந்தது, விலையும் குறைந்தது
கணினி உருவாக்கத்தில் அடுத்த மிகப் பெரிய நகர்வு 1950-களில் நடைபெற்றது. புதிய கணினியின் அளவு மிகச் சிறிதாக இருந்தது. அதற்கு ‘டிரான்சிஸ்டர்' என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு கணினியின் அளவு குறைந்தாலும்கூட, விலை மட்டும் குறையவே இல்லை.
நவீனக் கணினிகள் ‘மைக்ரோசிப்' என்ற சிறிய மின்சுற்றுப்பட்டையைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அளவில் சிறியதாகவும், வேகமாக இயங்கக்கூடியதாகவும், விலை குறைந்ததாகவும் மாறின. இன்றைக்கு கணினியின் அளவு மிகச் சிறியதாகவும், வாங்கக்கூடிய விலை கொண்டதாகவும் மாறியிருப்பதற்குக் காரணம் மைக்ரோசிப்புக்கு அடுத்த நிலையான ‘மைக்ரோபுராசசர்' கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
இதுதான் மனித இனம் எண்களைக் கண்டறிய ஆரம்பித்து கணினியைக் கண்டறிந்தது வரையிலான சுருக்கமான நிஜக் கதை.