அணில் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? கையில் ஒரு பழத்தையோ அல்லது கொட்டையையோ பிடித்தபடி கொறித்துக்கொண்டிருக்கும் காட்சிதானே. சரி, அணில் ஏன் எப்போதும் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கிறது?
உயிர்வாழும் ரகசியம்
அணிலின் முன்பற்கள் நீளமானவை, கூர்மையானவை. அவை தொடர்ந்து வளரும் தன்மை கொண்டவை. அணில்கள் இப்படி மரப்பட்டைகளையும் கொட்டைகளையும் கடித்துத் தங்கள் பற்களை தேய்க்காவிட்டால் அவை நீளமாக வளர்ந்துவிடும். அப்படி நீளமாகிவிட்டால் அணில்களால் வாயை அசைக்க முடியாது. வாயை அசைத்தால்தானே சாப்பிட முடியும்? சாப்பிட்டால்தானே உயிர்வாழ முடியும்? அதனால் அணில்கள், பட்டினி கிடந்து இறப்பதற்குப் பதிலாக இப்படிக் கொறித்துக் கொறித்துத் தங்கள் வாழ்நாளை நீட்டித்துக்கொள்கின்றன.
மரக்கிளைகளில் தாவியோடும் அணில்களைப் பற்றி இன்னொரு சந்தேகமும் தோன்றலாம். இவ்வளவு வேகமாக மரங்களில் ஓடும்போது அவை கீழே விழுந்துவிடாதா? பழத்தை இரு முன்னங்கால்களால் பிடித்துக் கொண்டிருக்கும்போது, பின்னங்கால்களால் மட்டும்தானே உட்கார்ந்திருக்கின்றன. எப்படி கீழே விழாமல் இருக்க முடியும்?
இரண்டு கேள்விக்கும் ஒரே பதில்தான். அணிலின் நகங்கள் வளைந்து இருக்கும். அந்த அமைப்பு, மரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள உதவும்.
குட்டிப் புதர் மாதிரி இருக்கிற அணிலின் வால், அவை தாவும்போது சமநிலையை ஏற்படுத்த உதவுகிறது. அதனால்தான் அணில்கள் எந்தப் பயமும் இன்றி கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மரத்தின் உச்சிக்கே சென்று, நம் கன்ணில் இருந்து மறைந்துவிடுகின்றன. சில அணில்கள் காற்றில் சறுக்கிப் பறக்கும் தன்மை கொண்டவை.
அணில்களின் கருணை
அணில்களிடம் இன்னொரு சிறப்பியல்பும் இருக்கிறது. அணில் குட்டிகளின் அம்மா உணவு தேடச் செல்லும்போது மற்ற விலங்குகளால் இறக்க நேரிட்டால், அணில் குட்டிகள் என்ன செய்யும்? அவற்றுக்கு இரை தேடி சாப்பிடத் தெரியாதுதானே. அதனால் மற்ற அணில்கள், அந்த அணில் குட்டிகளைத் தத்தெடுத்து வளர்க்கும்.
அதேபோல பெண் அணில்கள், குட்டிப்போடும் காலத்தில் எதையுமே சாப்பிடாது. பிரசவ காலத்தில் ஏற்படும் வலிக்கும், அணில்கள் உணவைத் தவிர்ப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அடுத்தமுறை அணிலைப் பார்க்கும்போது அதன் பல், வால், நகம் அனைத்தின் செயல்பாடுகளையும் கவனித்துப் பாருங்கள். உண்மையை நீங்களே உணர்வீர்கள்.