காகிதத்தில் ராக்கெட் செய்து பார்த்து, அதை மேலே எறிந்து மகிழ்ந்திருப்பீர்கள். அதே போல ஒரு ராக்கெட்டை வேறு ஒரு வகையில் செய்துபார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
சற்றே பெரிய ரீபில் அட்டை பெட்டி ஒன்று, போஸ்டர் வெள்ளைத் தாள், தூரிகை, ஒரு பலூன், பசை டேப், நூல், உறிஞ்சு குழல் (ஸ்டிரா), பசை, பென்சில்.
எப்படிச் செய்வது?
1 முதலில் அட்டைப் பெட்டியில் வெள்ளைத் தாளை எல்லா இடத்திலும் ஒட்டி காய்ந்தபின் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைத் தீட்டுங்கள் (படம் 1).
2 வண்ணம் பூசிய பெட்டியில் ஒரு ராக்கெட் படத்தை அழகாக வரைந்து வண்ணம் தீட்டுங்கள்.
3 இந்தப் பெட்டியின் மேல் பகுதியில் ஸ்ட்ராவைப் பசை டேப்பைக் கொண்டு ஒட்டுங்கள் (படம் 2).
4 ஸ்ட்ராவில் நூலைச் செலுத்தி மறுமுனையில் எடுக்கவும் (படம் 3).
5 அட்டைப் பெட்டியில் கோத்த நூலின் ஒரு முனையைக் கம்பு ஒன்றில் கட்டி, மறு முனையை எதிர்த் திசையில் உள்ள கம்பில் தொய்வு இல்லாமல் இழுத்துக் கட்டுங்கள் (படம் 4).
6. ராக்கெட் வரைந்த அட்டைப் பெட்டியை ஒரு முனையில் இழுத்து, அதனுள் பலூன் ஒன்றை வையுங்கள். பெட்டியில் இறுக்கமாக இருக்குமாறு பலூனில் காற்றை ஊதுங்கள் (படம் 5).
7. பலூனிலிருந்து கையை எடுத்து அப்படியே விடுங்கள். இப்போது கலாம் ராக்கெட் சப்தத்துடன் நூலின் மறுமுனைக்கு வேகமாகச் சீறிப் பாயும்.
இது பார்ப்பதற்கு ராக்கெட் செல்வது போலவே இருக்கும்.