மாயா பஜார்

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?

செய்திப்பிரிவு

யாருடைய குழந்தை இது…
அழுதுகொண்டு நிற்கிறதே?

சீருடைய முகம்சிவக்கச்
சிறுகையால் கண்பிசைந்து
விம்மிவிம்மித் தேம்பி

விழிநீர் மிகப்பெருக்கி
அம்மம்மா என்றுசொல்லி
அங்குமிங்கும் பார்க்கிறதே!

யாருடைய குழந்தை இது…
அழுதுகொண்டு நிற்கிறதே!

மையிற் படர்ந்தஇருள்
மாய்க்கவரும் ஞாயிறுபோல்
வையத்திருள் வாழ்வை

வளரின்ப மாக்கவரும்
தெய்வச் சுடர்க்குழந்தை
சிரித்தமுகம் வாடிமிக

நையக்கண்டால் உள்ளம்
நடுங்குகின்ற தென்செய்வேன்?

யாருடைய குழந்தை இது…
அழுதுகொண்டு நிற்கிறதே!

கன்னத்தில் முத்துதிரக்
கவலையிருள் தான்படர
என்னத்துக்காக இந்த
இளங்குருத்து வாடினதோ?

சின்னஞ் சிறுமொட்டு
சிரித்துமகிழ்ந் தாடாமல்
கொன்னி இதழ்பிதுக்கிக்
குலைகின்ற காரணம்என்ன?

யாருடைய குழந்தை இது…
அழுதுகொண்டு நிற்கிறதே!

பூவுலகைப் பார்க்கவந்த
பொன்னாட்டுத் தூதெனவே
மேவுமிளங் குழந்தையழ
விடலாமோ? விண்ணோர்கள்
தாமிதனைச் சகிப்பாரோ?

யாருடைய குழந்தை இது…
அழுதுகொண்டு நிற்கிறதே!

SCROLL FOR NEXT