காடுகளில் வாழும் நரிகளைப் பற்றி பாடப் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். கடலோரப் பகுதிகளில் வாழும் நரிகளைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? அந்த நரியின் பெயர் ஆர்க்டிக் நரி!
வெள்ளை நரி, துருவ நரி, பனி நரி என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன ஆர்க்டிக் நரி. ஆனால், ஆர்க்டிக்கில் துந்த்ரா என்ற நிலப் பகுதியில் இவை காணப்படுவதால், ஆர்க்டிக் நரி என்று அழைக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்தில், தென் துருவத்தின் பனிப் பிரதேசங்களில் இந்த நரிகள் வாழ்கின்றன. ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, வட ஐரோப்பா, ரஷ்யா, கனடா, அலாஸ்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
இது பார்ப்பதற்கு ஒரு பெரிய பூனையின் அளவுக்கு இருக்கும். இதன் ரோமம் பருவக் காலத்துக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. குளிர்காலத்தில் இதன் அடர்ந்த ரோமம் வெள்ளை நிறமாகத் தெரியும். கோடைக் காலம் ஆகிவிட்டால் சாம்பல் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் இருந்தால்கூட எந்தப் பிரச்சினையின்றியும் இது வாழும். ஏனென்றால், இது வெதுவெதுப்பான முடியுள்ள பாலூட்டி.
இந்த ஆர்க்டிக் நரிகளுக்கு அபாரமான கேட்கும் திறனும் மோப்பச் சக்தியும் உண்டு. பனிக்கு அடியில் ஒளிந்திருக்கும் இரையைக்கூட வெகு சுலபமாகக் கண்டுபிடித்துச் சாப்பிடும். லெம்மிங்குகள், கடல் பறவைகள், அதன் முட்டைகள், சீல் குட்டிகள், மீன்கள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். துருவக் கரடி மிச்சம் வைத்து விட்டுப் போகும் உணவையும் சாப்பிடும். பனிப் பிரதேசத்தில் ஒய்யாரமாக வாழ்ந்துவரும் இதன் ஆயுட்காலம் 3 முதல் 6 ஆண்டுகள் மட்டும்தான்.
தகவல் திரட்டியவர்: எம். பாலகுமார், 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விழுப்புரம்.