ஆப்பிரிக்காவை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும் என்றால் பாவோபாப் மரங்களைக் காட்டினால் போதும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்றது பாவோபாப்.
மரம் குண்டாகவும், கிளைகள் வளர்ந்தும் வளராதது போலக் காணப்படும் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்ட மரம்.
அமெரிக்காவின் மடகாஸ்கரில் 6 இனங்கள், ஆப்பிரிக்காவில் 2 இனங்கள், ஆஸ்திரேலியாவில் ஓர் இனம் என 9 இனங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் ஓரிரு இடங்களில் இந்த மரங்களைப் பார்க்க முடியும்.
5 மீட்டர் முதல் 30 உயரம் வரை வளரக்கூடியவை. சுற்றளவு 10 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடிய மரங்கள் இவை. பழங்காலத்தில் இவை மிகமிகப் பெரிய மரங்களாக இருந்திருக்கின்றன.
ஜிம்பாப்வேயில் ஒரு மரத்தைக் குடைந்து, 40 மனிதர்கள் அதில் வசித்திருக்கிறார்கள் என்றால் மரத்தின் அளவைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
வருடத்தில் 9 மாதங்கள் பாவோபாப் மரங்களில் இலைகளே இருக்காது. அதனால் மரத்தைத் தலைகீழாக நட்டு வைத்தது போலத் தோற்றத்தில் இருக்கும். மரத்தின் உட்பகுதி 15 மீட்டர் வரை மென்மையான நார்களால் நிரம்பியிருக்கும்.
அதில் சுமார் 1,20,000 லிட்டர் தண்ணீர் வரை சேமித்து வைத்திருக்கும்! தண்ணீர் சரிவரக் கிடைக்காத காலத்தில் உயிர் வாழ இந்தச் சிறப்பைப் பெற்றிருக்கின்றன. ஆப்பிரிக்க மக்கள், பாவோபாப் மரத்தில் சிறிய துளையைப் போட்டுத் தண்ணீரை எடுத்துக்கொள்வார்கள்.
ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் பாவோபாப் மரங்களை வெட்ட அனுமதி இல்லை. மரம் பட்டுப் போனாலோ, ஏதோ விபத்தில் சாய்ந்தாலோ, சிறிய கிளைகளிலிருந்து புதிய மரங்கள் துளிர்த்து வளர்ந்துவிடும். இதனால் பாவோபாப் மரங்களுக்கு மரணமே இல்லை என்றும் சொல்வதுண்டு.
பாவோபாப் மரத்தின் பட்டைகள் மற்ற மரங்களைப் போல இருப்பதில்லை. சாம்பல், இளஞ்சிவப்பு நிறங்களில் பளபளப்பாக இருக்கும். 20 ஆண்டுகளில் மரம் பூக்க ஆரம்பிக்கும். நல்ல பருவநிலை இருந்தால் ஆண்டு முழுவதும் பூக்கும்.
மிகப் பெரிய வெள்ளைப் பூக்கள் இரவு நேரங்களில் மலரக்கூடியவை. பூக்களின் நறுமணத்தை நாடி வெளவால்களும் பூச்சிகளும் படையெடுத்து வருகின்றன.
இவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 24 மணி நேரத்தில் பூக்கள் உதிர ஆரம்பித்துவிடுகின்றன. பழுப்பு வண்ணமாக மாறிய பூக்கள் துர்நாற்றத்தை வீசுகின்றன.
காய் 6 மாதங்களுக்குப் பிறகுதான் பழமாக மாறும். பெரிய இளநீர் அளவுக்குப் பெரியதாக இருக்கும். தடித்த ஓட்டின் மீது பச்சை முடிகள் படர்ந்திருக்கும். கோகோ விதை போலப் பழத்துக்குள் ஏராளமான விதைகள் இருக்கும்.
பழத்தில் டார்டாரி அமிலம், மக்னீசியம், பொட்டாசியம், ஆரஞ்சுப் பழத்தில் இருப்பதை விட 6 மடங்கு வைட்டமின் சி சத்துகளும் இருக்கின்றன. பழத்தை நீரில் கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும். மனிதர்களைப் போலக் குரங்குகளும் இவற்றை அதிகம் பயன்படுத்திக்கொள்கின்றன.
பழத்துக்குள் சிறுநீரக வடிவில் கறுப்பு விதைகள் காணப்படும். இவற்றை வறுத்து, பொடி செய்து காபி போலவும் குடிக்கிறார்கள்.
பாவோபாப் மரத்தின் இலைகளை வேக வைத்தும் சாப்பிடுகிறார்கள். இலைகள், பட்டைகள், பழங்கள், விதைகளிலிருந்து பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
மரத்தின் பட்டைகளிலிருந்து கயிறு, மிதியடி, கூடை, காகிதம், துணி, இசைக்கருவிகள், தண்ணீர் புகாத தொப்பிகளையும் செய்கிறார்கள்.
உயிரினங்களுக்கு அதிக அளவில் அடைக்கலம் அளித்துப் பாதுகாக்கின்றன பாவோபாப் மரங்கள். இவற்றின் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன.
குரங்குகளும் வெளவால்களும் பழங்களை உண்கின்றன. யானைகள் இவற்றிடமிருந்து தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன.
சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மனிதர்களால் பாவோபாப் மரங்கள் அழிந்துவருகின்றன. இதனால் எண்ணிக்கையில் இவை குறைந்து வருகின்றன.
நீண்ட ஆயுளும் பிரம்மாண்டமும் கொண்ட இந்த அதிசய மரங்களைப் பாதுகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை அல்லவா?