மாயா பஜார்

குருவின் பரிசு

விக்கி

மராட்டிய மாவீரர் சத்திரபதி சிவாஜி. இவர் அரியணைக்கு வருவதற்கு இவருடைய குரு ராமதஸார் வழிகாட்டியாக இருந்தார். பின்னர் அவர் தவம் செய்வதற்காகக் காட்டிற்குச் சென்றுவிட்டார்.

சிவாஜி தன் குருவிற்குப் பரிசளிக்க விரும்பினார். சிவாஜி, நாட்டுக்கே ராஜா அல்லவா? எனவே நிறைய பொன்னும் பொருளும் அனுப்பி வைத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்ட குரு ராமதாஸர், சிவாஜிக்கும் சில பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினார்.

பரிசுப் பொருட்களைக் கண்டால் மகிழ்ச்சிதானே வரவேண்டும்? ஆனால் சிவாஜியின் அம்மாவுக்கு குரு கொடுத்தனுப்பிய பொருட்களைப் பார்த்ததும் கோபம்தான் வந்தது. ஏன் தெரியுமா? மண், கல் மற்றும் சாணம்தான் குருவின் பரிசு.

“இப்படி யாராவது பரிசு தருவார்களா? அதுவும் ராஜாவிற்கு?” என்று கோபமாகக் கேட்டார் சிவாஜியின் அம்மா.

தன் குருவை நன்கு அறிந்தவர் சிவாஜி. அவர், “அம்மா, மண் என்பது நான் பல நாடுகளை வெற்றிகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அடுத்த பரிசுப் பொருள் கல். உறுதியான வலிமைமிக்க நாட்டை நான் ஆள வேண்டும் என்கிறார் குரு. சாணம் குதிரையுடையது. இதன் மூலம் குதிரைப்படையை உடனடியாக அமைக்கச் சொல்லியிருக்கிறார் குரு” என்றார்.

பெரியவர்கள் சொல்வதில் ஓர் அர்த்தம் இருக்கும். அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோமா?

SCROLL FOR NEXT