மாயா பஜார்

தொட்டாற்சிணுங்கி ஏன் சுருங்குது?

செய்திப்பிரிவு

தொட்டாற்சிணுங்கி என்று ஒரு இலையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? தொட்டவுடன் அது சிணுங்கிக்கொண்டு ஒன்றோடொன்று ஒட்டி சுருங்கிவிடும். மனிதர்கள் தொட்டவுடன் ஏன் இப்படி இந்த இலைகள் சிணுங்கி சுருங்கிவிடுகின்றன?

தொட்டாற்சிணுங்கியின் இலைகள் மற்றத் தாவரங்களின் இலைகளைப் போலவே பல செல்களின் ஒருங்கிணைப்பால் ஆனவைதான். ஒவ்வொரு செல்லும் சில திரவப் பொருட்களை இலைக்குள் கொண்டிருக்கும். இந்தத் திரவத்தின் அழுத்தம் காரணமாகத்தான் செல்களும், அவற்றாலான இலையும் நிமிர்ந்து நிற்க முடிகிறது. இலையின் உயிரணுவிலிருந்து திரவம் வெளியேறிவிட்டால், திரவ அழுத்தம் நீங்கி இலையின் உறுதித்தன்மை தளர்ந்துவிடும். புளிய மரம், வேலியோர முள் மரம், தூங்குமூஞ்சி மரம் போன்றவை இரவு நேரத்தில் சுருங்குவது இப்படித்தான்.

தொட்டாற்சிணுங்கி இலையைத் தொடும்போது, அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. அதனால் இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத் தன்மை நீங்கிவிடுகிறது. ஆனால், இலையின் மேற்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது.

தொட்டாற்சிணுங்கி சிணுங்குவதற்கு இதுதான் காரணம்!

தகவல் திரட்டியவர்: ஆ. ஹரிணி, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ பெரும்புதூர்.

SCROLL FOR NEXT