நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புது இடத்துக்குச் செல்கிறீர்கள். அங்கு இயற்கைக்கு மாறாக சில அபாயகரமான நிகழ்ச்சிகள் நடந்தால் பயந்து ஓடி வந்துவிடுவீர்கள். ஆனால், செயற்கையான முறையில் உங்களை மிரளவைக்க மேற்கொண்ட முயற்சி அது என்று தெரியவந்தால், உங்கள் பயமெல்லாம் பறந்துபோய் உற்சாகம் பிறக்கும். இது போன்ற திகிலூட்டும் அரங்கங்கள் இப்போது நம்மூரிலேயே உள்ளன. தைரியமாகப் போய் ஜாலியாக பயந்துவிட்டு வரலாம்! ஆனால் அதே போன்ற அரங்கங்களை சிலர் தங்கள் சுயலாபத்துக்காக உருவாக்கி சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டால்?
இது தான் ‘ஸ்கூபி டூ’ (Scooby-Doo) என்ற கார்ட்டூன் தொடரின் அடிப்படைக் கதை. 1960களில் ஹன்னா-பார்பரா (டாம் அண்ட் ஜெர்ரியை உருவாக்கியவர்கள்) தயாரித்த இந்தக் கார்ட்டூன் தொடரில் ஃப்ரெட் ஜோன்ஸ், டாஃபின் ப்ளேக், வெல்மா டிங்க்ளி மற்றும் ஷாகி ரோஜர்ஸ் என்ற நான்கு இளம் நண்பர்களுடன் ஸ்கூபி டூ என்ற நாயும் தோன்றும். ஸ்கூபி டூ சாதாரண எட்டுக்கால் பூச்சியைக் கண்டாலே டைனோஸரைக் கண்டதுபோல், பயந்து பாய்ந்தோடி விடும். இப்படியான துணிச்சல்மிக்க நாயின் துணையுடன்தான் நம் நண்பர்கள் பிக்னிக் அல்லது உள்ளூர் பிரமுகர் ஏற்பாடு செய்யும் பார்ட்டிகளுக்குச் செல்வார்கள். அங்கே, அவர்களைக் களேபரப்படுத்த சில கோரமான உருவங்கள் தோன்றும். கடைசியில் பார்த்தால், அது ஊரை ஏமாற்ற சில விஷமிகள் செய்த ஏற்பாடு என்பதை நண்பர்கள் கண்டுபிடிப்பார்கள். சாகசமும் நகைச்சுவையும் நிறைந்த இந்தக் கார்ட்டூன் தொடரில் ஸ்கூபியால் ஏற்படும் கலகலப்புக்குக் குறைவில்லை.