ஒருமுறை பரமார்த்த குருவும் அவரது சீடர்களும் இரவில் பயணம் செய்தனர். அந்த வழியே ஒரு ஆறு குறுக்கிட்டது. அதை எப்படிக் கடப்பது என யோசித்தார் குரு. தன் சீடர்களில் ஒருவனை அழைத்து, ஆறு தூங்கிவிட்டதா எனப் பார்த்துவரச் சொன்னார்.
அந்தச் சீடன் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளிக் கட்டையை ஆற்றில் முக்கினான். "உஸ்" என்ற சப்தத்துடன் கொள்ளிக்கட்டை அணைந்தது. உடனே குருவிடம் ஓடினான் சீடன். ஆறு கோபத்துடன் இருக்கிறது என்றான். சரி, அதன் கோபம் தணிந்ததும் கடக்கலாம் என நினைத்து அனைவரும் இளைப்பாறினர்.
பொழுது புலரத் துவங்கியது. இந்த முறை இன்னொரு சீடனை அனுப்பினார் குரு. அணைந்த கொள்ளியுடன் சென்றவன், அதை ஆற்று நீரில் வைத்தான். எந்தச் சத்தமும் எழாததால் ஆறு தூங்கிவிட்டதாகச் சொன்னான். அனைவரும் ஆறு விழித்து விடக் கூடாது என்ற கவனத்துடன் மெதுவாக ஆற்றைக் கடந்தனர்.
கரையேறியதும் அனைவரும் பத்திரமாக ஆற்றைக் கடந்துவிட்டார்களா என்று தன் சீடனிடம் கேட்டார் குரு. அந்தச் சீடனும் தன்னைத் தவிர மற்றவர்களை எண்ணிப் பார்த்துவிட்டு, ஒருவர் குறைவதாகச் சொன்னான்.
உடனே இன்னொரு சீடனையும் எண்ணிப் பார்க்கச் சொன்னார். அவனும் அவனை விட்டுவிட்டு மற்றவர்களை எண்ணி, ஒருவர் குறைவதாகச் சொன்னான். அனைவரும் தொலைந்து போகாத ஒருவனுக்காக அழ ஆரம்பித்தார்கள்.
இதை அந்தப் பக்கமாகச் சென்ற வழிப்போக்கன் பார்த்தான். குருவிடம் நடந்தது என்ன என்று கேட்டான். குருவும் தங்களில் ஒருவர் தொலைந்த கதையைச் சொன்னார். தொலைந்தவனைத் தேடி கண்டுபிடித்துத் தருவதாகச் சொன்னான் வழிப்போக்கன். அதற்குக் கூலியாக அவர்களிடம் இருந்த பணம் அனைத்தையும் கேட்டான்.
குருவும் அதற்குச் சம்மதித்தார். தன்னிடம் இருந்த மரக்கழியை மந்திரக்கோல் என்று சொன்ன வழிப்போக்கன், குருவையும் சீடர்களையும் வரிசை யாக நிற்கச் சொன்னான். அவர்களை மந்திரக்கோலால் அடிக்கும் போது ஒவ்வொருவரும் ஒன்று, இரண்டு என்று எண்ணோடு தங்கள் பெயரையும் சொல்ல வேண்டும் என்று சொன்னான். அடி வாங்கியவர்கள் தங்கள் பெயரையும் எண்ணையும் சொன்னார்கள். முடிவில் காணாமல் போனவன் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து தங்களிடம் இருந்த பணத்தை வழிப்போக்கனிடம் கொடுத்தார்கள். வழிப்போக்கனும் தன் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்ச்சியாகச் சென்றான்.