மாயா பஜார்

வகுப்பறைக்கு வெளியே: ஒரு விஞ்ஞானியின் பிரம்மாண்டப் புத்தகம்

ஆதி

நாம் ஒரு தாவரத்தைப் பார்க்கிறோம், ஒரு உயிரினத்தைப் பார்க்கிறோம். அதே தாவர-உயிரின வகைக்கு தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் சொல்லப்படுகிறது. அதையே தேசிய அளவிலும் உலக உளவிலும் இன்னும் நிறைய பெயர்கள் சொல்லியும் அழைக்கப்படுகின்றன. அப்படியானால் நாம் பார்த்த தாவரம், உயிரினம் எந்த வகையைச் சேர்ந்தது என்று எப்படிக் கண்டறிவது? அந்தத் தாவரமோ, உயிரினமோ மற்றவற்றிலிருந்து சற்றே வேறுபட்டிருந்தால், அதை எப்படி உறுதிப்படுத்துவது?

இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணவே தாவரவியலாளர்கள், விலங்கியலாளர்கள் ‘இரு சொல் பெயரிடும் முறை'யைப் பயன்படுத்துகிறார்கள். அதன்படி எல்லா தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் இரண்டு சொற்களால் ஆன லத்தீன் பெயர் இடப்படும். உலகில் புதிதாகக் கண்டறியப்படும் ஒவ்வொரு தாவர, உயிரின வகைக்கும் இப்படிப் பெயரிடப்படுகிறது. அறிவியல் ரீதியில் இந்தப் பெயரே பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழப்பமும் தவிர்க்கப்படுகிறது. இந்த இரு சொற்களில் முதலாவது தாவரம்-உயிரினத்தின் பேரினத்தையும் (genus), இரண்டாவது சொல் குறிப்பிட்ட சிற்றினம் அல்லது வகையையும் (species) குறிக்கும்.

பெயர் வைத்த மருத்துவர்

இப்படி இரு சொற்களில் பெயரிடும் முறையைக் கண்டறிந்தவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கார்ல் லின்னேயஸ். இவர் ஒரு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவரும்கூட. இவருடைய தந்தையும் ஒரு தாவரவியலாளர். பட்டப் படிப்பு முடித்தவுடன் ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை விரிவுரையாளராக லின்னேயஸ் பணியாற்றினார். அந்தக் காலத்தில் தாவரங்கள் வகைப்படுத்தப்படும் விதத்தை மேம்படுத்துவது குறித்து கட்டுரைகளையும் அவர் எழுதினார். இதையடுத்து, தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட அவருக்கு நிதி கிடைத்தது.

அவருடைய காலத்துக்கு முன்புவரை தாவரங்கள் ‘பல சொல் பெய'ரால் அழைக்கப்பட்டுவந்தன. இதில் நிறைய சிக்கல்கள் உருவாகின. இதைத் தவிர்க்க கஸ்பார்டு பாகின் என்ற அறிஞர் இரு சொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார். இருந்தாலும் அதை முறைப்படுத்தி, பிரபலப்படுத்தியவர் லின்னேயஸ்தான். இதற்காக (“Species Plantarum”, 1753) என்ற தனி நூல் ஒன்றையும் அவர் எழுதினார்.

வகைப்பாட்டியலின் தந்தை

தாவரங்கள், உயிரினங்களுக் கான இரு சொல் பெயரிடும் முறையுடன் ‘Systema Naturae' (இயற்கையின் அமைப்பு) என்ற பெயரில் 1737-ல் அவர் ஒரு நூலை எழுதினார். முதல் பதிப்பு வெறும் 12 பக்கங்களையே கொண்டிருந்தது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அதன் 10-வது பதிப்பில் 4,400 உயிரினங்கள், 7,700 தாவர இனங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. 12-வது பதிப்பில் 2,400 பக்கங்களுடன் இந்தப் புத்தகம் பிரம்மாண்டமாக வெளியானது. உலகில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தையும் வகைப்படுத்துவதற்கான மிகப் பெரிய, முதல் முயற்சி இது என்பதில் சந்தேகமில்லை.

தாவர, விலங்குகளை வகைப்படுத்தும் ‘இரு சொல் பெயரிடும் முறை'யை பிரபலப்படுத்தியதால் ‘வகைப்பாட்டியலின் தந்தை' என்று இவர் போற்றப்படுகிறார். லின்னேயஸ் உருவாக்கிய பல உயிரினங்களுக்கான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்றாலும், அவர் உருவாக்கிய தாவரங்களுக்கான பல பெயர்கள் 280 ஆண்டுகளைக் கடந்து, இன்றைக்கும்கூட பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்பது அவருடைய பெருமையைப் பறைசாற்றுகிறது.

பிற்காலத்தில் ‘ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி’ என்ற அறிவியல் ஆராய்ச்சிக்கான உயரிய அமைப்பு உருவாக உதவி செய்து, முதல் தலைவராகவும் லின்னேயஸ் பொறுப்பு வகித்தார். இரட்டைப்பூ பேரினம் (லின்னெயா; Linnaea), நிலவுப் பள்ளம் (லின்னெ; Linn), கோபால்ட் சல்பைட்டு தாது (லின்னைட்; Linnaeite) ஆகியவற்றுக்குப் பெயரிடப்பட்டு லின்னேயஸ் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT