குட்டிகளே! மகாபாரதத்தின் கதாநாயகர் களான பஞ்சபாண்டவர்களில் மிகப் பெரிய உடலமைப்பும் அதிசயிக்க வைக்கும் உடல் வலிமையையும் கொண்டவர்தான் பீமன். மலையைவிட பெரிய அசுரன் வந்தாலும், பயமே இல்லாமல் எதிர்கொண்டு மோதி வெற்றி பெறும் துணிச்சல் வீரன். அவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்துக் கற்பனையாக உருவாக்கப்பட்ட கார்ட்டூன் பாத்திரம்தான், உங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான ‘ச்சோட்டா பீம்’ (குட்டி பீமன்!).
கற்பனை கிராமமான தோலக்பூரில் வசிக்கும் ஒன்பது வயது சிறுவன்தான் சோட்டா பீம். நேர்மையும் துணிச்சலும் மிக்க பீம், ஊர் மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைத் தீர்க்க முன்னால் நிற்பவன். அதன்மூலம் தோலக்பூர் மன்னர் இந்திரவர்மரின் நன்மதிப்பைப் பெற்றவன். அவனுக்குப் பியாரி சுட்கி என்ற ஏழு வயது சிறுமியும் மைட்டிராஜு என்ற நான்கு வயது சிறுவனும் நெருங்கிய நண்பர்கள். சுட்கி அன்புடன் தரும் லட்டுதான் பீமின் அசாத்திய வலிமையை அதிகரிக்கும் அற்புதப் பண்டம்.
ஜக்கு பந்தர் என்ற குரங்கு, பீமின் அன்பைப் பெற்றது. தனது தந்தை மன்னரின் படைப்பிரிவின் தளபதி என்பதால், மைட்டி ராஜூவும் இயல்பாகவே துணிச்சல் மிக்கவன். இப்படி நல்லவர்களாகவே எல்லோரும் இருந்தால் போரடிக்குமே! பிறருக்குத் தொல்லை தரவேண்டும் என்ற எண்ணம்கொண்ட உஸ்தாத் காலியா என்ற பத்து வயது பயில்வானும், அவனது அடிப்பொடிகளான தோலு மற்றும் போலு என்ற இரட்டைச் சகோதரர்கள்தான் கதையின் முக்கிய வில்லன்கள். இவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை முறியடிப்பது பீமின் அன்றாட வேலைகளில் ஒன்று. இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகப் பிரபலமான கார்ட்டூன் பாத்திரங்களில் பீமும் ஒருவன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.