ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முதல் விடுதலைப் போர் 1857-ல் தொடங்கினாலும், அடுத்த 60 ஆண்டுகளுக்குப் பிரிட்டிஷ் ஆட்சியை நம் நாட்டு மக்களால் தீவிரமாக எதிர்க்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவந்த காந்தி, 1915-ல் நாடு திரும்பினார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 1921-ல் அந்தக் கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பெற்றார்.
உப்புக்கு வரியா?
1930-ல் மக்கள் அன்றாட உணவில் பயன்படுத்தும் விலை மலிவுப் பொருளான உப்புக்கு ஆங்கிலேய அரசு வரி விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காந்தி, ‘உப்புச் சத்தியாகிரகம்’ என்ற போராட்டத்தை அறிவித்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இது மிக முக்கியமானது.
‘உப்புச் சத்தியாகிரகம்’ போராட்டத்துக்கான யாத்திரையைத் தன்னுடைய சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டியை நோக்கிக் காந்தி ஆரம்பித்தார். வழியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.
60,000 பேர் கைது
குஜராத்தின் கடற்கரை கிராமமான தண்டியில் 26 நாட்களுக்குப் பிறகு யாத்திரையைக் காந்தி நிறைவு செய்தார். 1930 ஏப்ரல் 5-ம் தேதி அங்குள்ள உப்பளத்திலிருந்து உப்பை எடுத்தார். ‘என் உணவுப் பயன்பாட்டுக்கான உப்பை என்னுடைய நிலத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்த, அரசுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை’ என்று கூறி இந்தப் போராட்டத்தை அவர் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தேசிய அளவில் உப்புக்கான வரிவிதிப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. காந்தியைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் தொடர்ந்து 60,000 பேரைக் கைது செய்தனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இது முக்கியமான போராட்டமாகத் திகழ்ந்தாலும், 1946-ல் விடுதலை பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னர்தான் இந்த உப்பு வரி விலக்கிக் கொள்ளப்பட்டது.
வெள்ளையருக்கு நெருக்கடி
உப்புச் சத்தியாகிரகம் என்ற மிகப் பெரிய போராட்டத்துக்கு 12 ஆண்டுகள் கழித்து, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஆங்கிலேய ருக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்திய மற்றொரு போராட்டம் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’. பம்பாயில் 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்க’த்தை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தையொட்டி இந்தியாவுக்கு உடனடியாக பிரிட்டன் விடுதலை வழங்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.
காந்தியின் அழைப்பை ஏற்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் வேலையைத் துறந்து இந்த இயக்கத்தில் இணைந்து போராட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிரித்தாளும் சூழ்ச்சி
ஆனால், மக்களிடையே இருந்த கடுமையான எதிர்ப்புணர்வை உணர்ந்த ஆங்கிலேயர்கள், இரண்டாம் உலகப் போர் முடிந்த உடனேயே இந்தியாவுக்கு விடுதலை வழங்கும் மனநிலையை எட்டியிருந்தனர். இரண்டாம் உலகப் போர் காரணமாகப் பொருள் இழப்பு, ராணுவ வீரர்கள் இழப்பு என்று பிரிட்டன் பலவீனமான நிலைக்குச் சென்றிருந்தது. இந்தியாவை அதற்கு மேலும் கட்டுக்குள் வைத்திருக்கும் எண்ணம் பிரிட்டனுக்குக் குறைந்தது.
பிரிட்டன் விடுதலை வழங்கத் தயாராக இருந்த நிலையில் முஸ்லிம் லீக் கட்சி தனி நாடு வேண்டுமென்று கேட்டது. இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன், இந்தியாவை இரண்டாகப் பிரித்து விடுதலை வழங்கும் திட்டத்தை முன்வைத்தார். கடைசியாக, 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்து-முஸ்லிம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்திய விடுதலை வரலாற்றில் அது ஒரு கறுப்புப் பக்கம். ஆனால், இது பெரிதாகப் பேசப்படாமலேயே போய்விட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றைக்கும் எதிரெதிராக நிற்பதற்கு இந்தப் படுகொலைகளும் முக்கியக் காரணம்.