என்னோட தோழி வீட்டுக்குப் போயிருந்தேன். அங்க ‘முயற்சியும் வெற்றியும்’ என்ற புத்தகத்தைப் பார்த்தேன். அதுல நிறைய கதைகள் இருந்துச்சு. கதைகள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, அந்தப் புத்தகத்தை உடனே படிச்சேன். கதையைப் படிக்கப் படிக்கத்தான், கதைகள் ஒவ்வொன்னும் உலக நீதி, கொன்றைவேந்தன், மூதுரை, நீதிநெறி விளக்கம், திருக்குறள் நூல்களில் உள்ள செய்யுள்களையும் அவற்றின் கருத்துகளையும் கொண்டு கதைகளை எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
கதையோட ஒவ்வொரு தலைப்புமே தெரிஞ்ச தலைப்புதான். ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’, ‘ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்’- இப்படித்தான் ஒவ்வொரு தலைப்பையும் கதைக்குச் சூட்டியிருக்காங்க. அந்தத் தலைப்புக்கு ஏற்பக் கதையையும் சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு செய்யுளுக்கும் உள்ள கதையைப் படிச்ச பிறகுதான், அந்தச் செய்யுளோட முழு அர்த்தமே எனக்கு முழுசா புரிய ஆரம்பிச்சது. இந்தக் கதை நம்ம மனசுல இருக்குற வரைக்கும், அந்தச் செய்யுளும் மறக்கவே மறக்காது.
புத்தகத்துக்குப் பின்னாடி பயிற்சி செய்ய வசதியா அகராதியையும்கூடப் போட்டிருக்காங்க. தூய தமிழை எளிமையான தமிழலில் புரிந்துகொள்ள இந்த அகராதியும் உதவியா இருந்துச்சு. இந்தப் புத்தகத்துல உள்ள ஒவ்வொரு கதையும் நீதியையும், ஒழுக்கத்தையும், நல்ல நெறிகளையும் எடுத்துச் சொல்லுது. இதையெல்லாம் புரிஞ்சுக்குற மாதிரிக் கதையும் இருக்குறதால எனக்குப் புத்தகம் பிடிச்சிருந்தது. உங்களுக்கும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆசையா? அப்போ கமலா சுவாமிநாதன் எழுதியிருக்குற ‘முயற்சியும் வெற்றியும்’ புத்தகத்தை வாங்கிப் படிங்க.
உங்களுக்குப் பிடித்த நூல் எது? குழந்தைகளே! உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா என யாராவது உங்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். நீங்களும் அதை ஆசையாகப் படித்திருப்பீர்கள். அப்படி ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கிறதா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்பவும் மறக்க வேண்டாம். படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். ‘மழலை மதிப்புரை’ என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புகிறீர்களா? |
நூல்: முயற்சியும் வெற்றியும்
ஆசிரியர்: கமலா சுவாமிநாதன், விலை: ரூ. 65
வெளியீடு: வானதி பதிப்பகம்
முகவரி: 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை, 600 017.
தொலைபேசி: 044-24342810
நூல் மதிப்புரை செய்தவர்:
ஆ. ஹரிணி, 7-ம் வகுப்பு,
அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
ஸ்ரீ பெரும்புதூர்.